புதுக்கோட்டை மாவட்டம் அருகே 35 வயது மதிக்கத்தக்க மாற்றுத்திறனாளிப் பெண் ஒருவர், அடையாளம் தெரியாத கும்பலால் கடத்திச் செல்லப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் ஊடகங்களில் வெளியாகி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், பெண்களுக்கு எதிரான இத்தகைய கொடூரக் குற்றச் செயலில் ஈடுபட்ட சமூக விரோதிகள் அனைவரையும் போலீசார் விரைந்து கைது செய்ய வேண்டும் என்றும், அவர்களுக்குக் கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்றும் தவெக அரசை வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் புதிய ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருவது குறித்து டி.டி.வி.தினகரன் தனது அறிக்கையில் விமர்சித்துள்ளார். பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களால் அறிவிக்கப்பட்ட “சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை”

இன்னும் செயல்பாட்டிற்கு வராமல் வெறும் பெயரளவிலேயே இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக அவர் சாடியுள்ளார். மேலும், இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழா வண்ணம் தவெக அரசு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.