தமிழ்நாடு அமைச்சரவையில், தவெகவிற்கு ஆதரவளிக்கும் அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்று பரவி வரும் செய்திகள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தனது கட்சியின் நிலைப்பாட்டை அதிரடியாக விளக்கியுள்ளார். தமிழக மக்கள் திமுக, அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளுக்கும் எதிராகவே தங்களது தீர்ப்பை வழங்கியிருந்தனர் என்று குறிப்பிட்ட அவர், எந்தவொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், தவெகவிற்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இருந்ததால் மட்டுமே இடதுசாரிகளும் விசிகவும் ஆதரவளித்ததாகக் கூறியுள்ளார்.
தமிழ்நாடு மீண்டும் ஒரு இடைத்தேர்தலைச் சந்திக்கக் கூடாது என்பதற்காகவும், கவர்னர் மூலமாகக் கொல்லைப்புற வழியாக பாஜகவின் ஆட்சி வந்துவிடக் கூடாது என்பதற்காகவுமே இந்த ஆதரவை வழங்கியதாக அவர் தெளிவுபடுத்தியுள்ளார். அதிமுகவை தவெக தனது ஆட்சியில் சேர்த்துக் கொள்வதோ அல்லது அவர்களுக்கு அமைச்சரவையில் இடம் தருவதோ ஒட்டுமொத்த மக்கள் தீர்ப்புக்கு எதிரானது என்றும், அது ஒரு நல்லாட்சிக்கு விரோதமாக முடியும் என்றும் பெ.சண்முகம் கடுமையாகச் சாடியுள்ளார்.
ஏற்கனவே இரு திராவிடக் கட்சிகளுக்கும் எதிராக மக்கள் வாக்களித்துள்ள நிலையில், மீண்டும் அதிமுகவின் ஆதரவைப் பெற்று தவெக ஆட்சியைத் தொடர்வது சரியாக இருக்காது என்றும், அத்தகைய நிலைக்கு முதலமைச்சர் விஜய் செல்ல மாட்டார் எனத் தாம் நம்புவதாகவும் அவர்குறிப்பிட்டுள்ளார்.
இதையெல்லாம் மீறி, தவெக நிர்வாகம் அதிமுகவின் ஆதரவைப் பெற முற்பட்டால், தவெக அரசுக்குத் தாங்கள் அளித்து வரும் ஆதரவை நிச்சயமாக மறுபரிசீலனை செய்ய நேரிடும் என்று மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் அவர் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
