அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள கிரேப்வைன் ஏரி (Grapevine Lake) பகுதியில் திங்கள்கிழமை இரவு ஒரு விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. எலான் மஸ்க்கின் உலகப் புகழ்பெற்ற டெஸ்லா சைபர்டிரக் (Tesla Cybertruck) ரக எலக்ட்ரிக் காரை வாங்கிய நபர் ஒருவர், அந்த காரில் உள்ள ‘வேட் மோடு’ என்ற சிறப்பம்சத்தைச் சோதித்துப் பார்க்க ஆசைப்பட்டுள்ளார்.

இந்த மோடை ஆன் செய்தால் கார் தண்ணீருக்குள் மிதக்கவோ அல்லது ஆழமில்லாத தண்ணீரை எளிதாகக் கடக்கவோ முடியும் என டெஸ்லா நிறுவனம் விளம்பரப்படுத்தியிருந்தது. இதை அப்படியே நிஜம் என நம்பிய அந்த கார் ஓனர், காரை நேராக ஏரித் தண்ணீருக்குள் இறக்கியுள்ளார்.

துரதிர்ஷ்டவசமாக, ஏரிக்குள் சென்ற சில நிமிடங்களிலேயே தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கார் தண்ணீருக்குள் அப்படியே படுத்துக்கொண்டது.

கார் செயலிழந்து உள்ளே தண்ணீர் புகத் தொடங்கியதால், பயந்துபோன காரின் உரிமையாளரும் அவருடன் வந்த பயணிகளும் காரை ஏரியிலேயே போட்டுவிட்டு அவசர அவசரமாக வெளியே தப்பினர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் நீர் மீட்புக் குழுவினர், ஏரிக்குள் மூழ்கிய காரை மீட்டு வெளியே எடுத்தனர். கார் ஓனரின் இந்த முட்டாள்தனமான செயலால் கார் மொத்தமாகப் பாழானதோடு மட்டுமில்லாமல், ஆபத்தான முறையில் காரை இயக்கிய குற்றத்திற்காக அந்த டெஸ்லா காரின் உரிமையாளரை அமெரிக்க போலீசார் கைது செய்து தற்போது ஜெயிலில் அடைத்துள்ளனர்.