கனடாவில் வசிக்கும் இந்திய இளைஞர் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. அங்கு மரங்களின் கிளைகளை வெட்டும் தொழிலாளி ஒருவர், வெறும் ஒரு மணி நேர வேலைக்காக 700 கனேடிய டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ₹49,000) கூலியாகப் பெற்றதாக அந்த இளைஞர் அதில் தெரிவித்துள்ளார். அந்தத் தொழிலாளியின் மாத வருமானத்தைக் கணக்கிட்டுத் தனது தலைசுற்றிவிட்டதாகக் கூறியுள்ள அந்த இளைஞரின் பதிவு, வெளிநாடுகளில் உள்ள திறன் சார்ந்த சாதாரண வேலைகளின் வருமானம் குறித்த புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ள அந்த இந்திய இளைஞரின் பெயர் விஷால் எனத் தெரியவந்துள்ளது. அவர் தனது பதிவில், “கனடாவில் கடின உழைப்பிற்கும், தனித்திறனுக்கும் மிகப்பெரிய மதிப்பு உள்ளது. மரம் வெட்டுவது அல்லது அதன் கிளைகளைக் கத்தரிப்பது பார்ப்பதற்கு எளிய வேலையாகத் தோன்றலாம். ஆனால், அதற்குச் சிறப்புப் பயிற்சி, அனுபவம் மற்றும் விலையுயர்ந்த உபகரணங்கள் தேவைப்படுகின்றன. இது வெறும் உடல் உழைப்பு சார்ந்த வேலை மட்டுமல்ல, பெரும் ஆபத்துகள் நிறைந்த ஒரு தொழில்நுட்பப் பணியாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கோடைக் காலத்தில் இந்தத் தொழிலாளர்களுக்குத் தினமும் வேலை வாய்ப்புகள் குவிந்து கிடப்பதாகவும், குளிர் காலத்தில் இவர்கள் பனியை அகற்றும் பணிகளில் ஈடுபட்டுப் பெருமளவில் சம்பாதிப்பதாகவும் விஷால் விவரித்துள்ளார். சரியான தனித்திறன் இருந்தால் கனடாவில் மிகப்பெரிய அளவில் சம்பாதிப்பது கடினமல்ல என்று கூறியுள்ள விஷால், இளைஞர்கள் வெறும் அலுவலகப் பணிகளை மட்டுமே தேடி ஓடாமல், திறன் சார்ந்த தொழில்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். அங்கு புல் வெட்டுதல், பனி சுத்தம் செய்தல் மற்றும் மரங்களை சீரமைத்தல் போன்ற வேலைகள் அதிக வருவாய் ஈட்டித் தரும் தொழில்களாக மாறியுள்ளன.

 

இதற்குச் சமூக வலைதளங்களில் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்தியாவில் உள்ளதை விட வெளிநாடுகளில் இத்தகைய தொழிலாளர்களுக்குப் பணமும், சமூக மரியாதையும் மிக அதிகமாகக் கிடைப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த வீடியோவிற்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் பதில்கள் வந்த வண்ணம் உள்ளன. கனடா போன்ற வளர்ந்த நாடுகளில் நேரத்திற்கும் உழைப்பிற்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதால் இவ்வளவு பெரிய தொகை வழங்கப்படுவது நியாயமே என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர். மரம் வெட்டும் பணி உயிருக்கு ஆபத்தானது என்பதால் இந்த கட்டணம் சரியானதுதான் என வேறு சிலர் குறிப்பிட்டுள்ளனர்.

இன்றைய காலகட்டத்தில் வெறும் பட்டப்படிப்பை விட, கையில் இருக்கும் தொழில்திறனே வாழ்வை உயர்த்தும் என்று பல பயனர்கள் எழுதியுள்ளனர். இருப்பினும், இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவில் கூறப்பட்டுள்ள தகவல்களின் உண்மைத்தன்மை குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த உறுதிப்படுத்தலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.