மத்தியப் பிரதேச மாநிலம் அம்ஜேரா பகுதியில், காவல் நிலையத்திற்கு மிக அருகிலேயே இளைஞர் ஒருவர் தடி மற்றும் கற்களால் கொடூரமாகத் தாக்கப்படும் அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பயங்கர வைரலாகி வருகிறது.

கமாலியா கிராமத்தைச் சேர்ந்த விஜய் (24) என்ற இளைஞர், அம்ஜேரா காவல் நிலையத்தின் பின்புறம் உள்ள அங்கன்வாடி அருகே நின்று திருமண ஊர்வலத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த சிலர், அவர் அங்கு நிற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வாக்குவாதம் திடீரென முற்றியதில், ஆத்திரமடைந்த கும்பல் அந்த இளைஞரைத் தடிகளாலும் கற்களாலும் கொடூரமாகத் தாக்கத் தொடங்கியது. அவர்களிடம் இருந்து தப்பிக்க அந்த இளைஞர் ஓடியபோதும், அக்கும்பல் அவரை விடாமல் துரத்தித் தாக்கியுள்ளது. இறுதியில், அவர் தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நேரடியாக அம்ஜேரா காவல் நிலையத்திற்குள் புகுந்தார்.

“>

 

இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய அம்ஜேரா காவல் நிலைய அதிகாரி ராஜு மக்வானா, பாதிக்கப்பட்ட இளைஞரின் புகாரின் பேரில் ராஜா, கிருஷ்ணா, மனிஷ், ராகுல் மற்றும் சீமா ஆகிய ஐந்து பேர் மீது பாரதிய நியாய சன்ஹிதா  சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையிலும் போலீசார் தங்களது விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.