உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில், நான்கு ஆண்டுகளாகத் தன்னுடன் சேர்ந்து வாழ்ந்து வந்த நபர், தனது 19 வயது வளர்ப்பு மகளை ஆசை வார்த்தை கூறி கூட்டிட்டுத் தப்பியோடிவிட்டதாக ஒரு தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட அந்தப் பெண், தனது முதல் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், ஏற்கனவே திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ள 45 வயதுடைய ஒரு நபருடன் கடந்த நான்கு ஆண்டுகளாகத் தனது இரண்டு மகள்களுடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார்.

அந்த நபரைத் தனது குழந்தைகள் ஒரு குடும்ப உறுப்பினராகவே கருதியதாகவும், தப்பியோடிய 19 வயது வளர்ப்பு மகள் அவரை ‘அப்பா’ என்றே அழைத்து வந்ததாகவும் அந்தத் தாய் வேதனையுடன் தெரிவித்துள்ளார். கடந்த மே 15-ஆம் தேதி இரவு முதல் இந்த சம்பவத்திற்குப் பிறகு, அவர்கள் இருவரையும் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட தாய் அளித்த புகாரின் பேரில், ஹர்பூர் புதாத் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். தப்பியோடிய அந்தப் பெண் தற்போது கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார் என்றும், அவளுக்கு அந்த நபரால் ஏதேனும் ஆபத்து நேரிடலாம் என்றும் அந்தத் தாய் தனது புகாரில் அச்சம் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்துப் பேசிய காவல்துறை அதிகாரி யோகேந்திர சிங், தலைமறைவாக உள்ள அந்த நபரையும், இளம்பெண்ணையும் கண்டுபிடிப்பதற்காகத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாகவும், குற்றம் சாட்டப்பட்ட நபர் விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் தெரிவித்துள்ளார்.