மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், தாத்தாவின் அஜாக்கிரதையால் காரின் பின் இருக்கையில் தூங்கிக்கொண்டிருந்த 4 வயது சிறுமி, கத்திரி வெயிலில் காரினுள்ளேயே பூட்டப்பட்டு மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது.
இந்தூரின் நந்தன் வன் காலனியைச் சேர்ந்த சாபிர் உசேன் என்பவர், குடும்பத்தில் உள்ள குழந்தைகளைத் தனது காரில் வெளியே அழைத்துச் சென்றுவிட்டு மதியம் வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.
அப்போது மற்ற குழந்தைகள் இறங்கிய நிலையில், காரின் பின் இருக்கையில் அசந்து தூங்கிக் கொண்டிருந்த 4 வயது பேத்தியை கவனிக்காமல், காரை முழுமையாக லாக் செய்துவிட்டு வீட்டிற்குள் சென்றுவிட்டார்.
மதிய நேரத்தில் கொளுத்திய கடும் வெயிலில், ஏசி மற்றும் காற்றோட்டம் இல்லாமல் கார் முழுக்க வெப்பமடைந்ததால், சுமார் இரண்டு மணி நேரம் காரினுள்ளேயே மாட்டிக்கொண்ட அந்த குழந்தை மூச்சுத்திணறி மயக்கமடைந்துள்ளது.
நீண்ட நேரமாகியும் குழந்தையைக் காணவில்லை எனத் தேடியபோதுதான், காரின் தானியங்கி கண்ணாடிகள் முழுமையாக மூடப்பட்ட நிலையில் குழந்தை உள்ளே மயங்கிக் கிடப்பது தெரியவந்தது. உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
