நார்வே நாட்டிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம், அந்நாட்டு பெண் பத்திரிகையாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பிரதமர் பதிலளிக்காமல் சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், “கேள்விகளைக் கண்டு பிரதமர் மோடி பயந்து ஓடுகிறார்” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

நார்வே பயணத்தின் போது பிரதமர் மோடி நடந்து சென்றுகொண்டிருந்தபோது, அந்நாட்டின் பிரபல பெண் பத்திரிகையாளர் ஹெலே லிங் ஸ்வென்சென்  என்பவர், “பிரதமர் மோடி அவர்களே, உலகின் மிகச் சுதந்திரமான ஊடகங்களின் கேள்விகளுக்கு நீங்கள் ஏன் பதிலளிப்பதில்லை?” என்று உரத்த குரலில் கேள்வி எழுப்பினார். ஆனால், பிரதமர் மோடி அதற்குப் பதிலளிக்காமல் அங்கிருந்து கடந்து சென்றார்.

இந்த வீடியோவை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “மறைப்பதற்கு எதுவும் இல்லாதபோது, பயப்பட வேண்டிய அவசியம் என்ன? உலக நாடுகளின் முன்னிலையில், இந்தியாவின் பிரதமர் ஒரு சில கேள்விகளைக் கண்டு அஞ்சி ஓடுவதைப் பார்க்கும்போது இந்தியாவின் பிம்பம் என்னவாகும்?” என்று கடுமையாகச் சாடியுள்ளார். எதிர்க்கட்சியைச் சேர்ந்த பல தலைவர்களும் இந்த வீடியோவை பகிர்ந்து மோடிக்கு எதிராகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த சர்ச்சை நாடு முழுவதும் புகையத் தொடங்கியதைத் தொடர்ந்து, நார்வேயில் உள்ள இந்திய தூதரகம் அந்தப் பெண் பத்திரிகையாளரின் பதிவிற்கு எக்ஸ் (X) தளத்தில் அதிகாரப்பூர்வமாகப் பதிலளித்துள்ளது. அதில், “அன்பான செல்வி ஹெலே, பிரதமரின் நார்வே பயணம் குறித்த அதிகாரப்பூர்வ பத்திரிகையாளர் சந்திப்பை இன்று இரவு 9:30 மணிக்கு ராடிசன் புளூ பிளாசா ஹோட்டலில் தூதரகம் ஏற்பாடு செய்துள்ளது. நீங்கள் தாராளமாக அங்கு வந்து உங்களுடைய கேள்விகளைக் கேட்கலாம், உங்களை அன்போடு வரவேற்கிறோம்” என்று தூதரகம் அழைப்பு விடுத்து, இந்தச் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றுள்ளது.

இதற்கிடையில், இந்தியா – நார்வே இடையிலான இருதரப்பு உறவை மேம்படுத்தியதற்கும், அவரது சிறந்த உலகளாவிய தலைமைத்துவத்திற்கும் பாராட்டு தெரிவிக்கும் வகையில், நார்வே நாட்டின் மிக உயரிய குடிமை விருதான ‘கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ராயல் நார்வேஜியன் ஆர்டர் ஆஃப் மெரிட்’ விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது.

தலைநகர் ஒஸ்லோவில் நடைபெற்ற சிறப்பு விழாவில், நார்வே நாட்டின் மன்னர் ஐந்தாம் ஹெரால்டு, பிரதமர் மோடிக்கு இந்த விருதை வழங்கி கௌரவித்தார். வெளிநாட்டு அரசுத் தலைவர்களுக்கு நார்வே அரசு வழங்கும் மிக உயரிய கௌரவம் இதுவாகும். இதன் மூலம், சர்வதேச அளவில் பிரதமர் மோடி பெறும் 32-ஆவது சர்வதேச விருது இது என்பது குறிப்பிடத்தக்கது.