பிரபல பிரிட்டிஷ் ரியாலிட்டி ஷோவான ‘மேரிட் அட் ஃபர்ஸ்ட் சைட் யூகே’ படப்பிடிப்பின் போது, தங்களுக்கு நேர்ந்த அதிர்ச்சியூட்டும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து அதில் பங்கேற்ற மணமகள்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளனர். பிபிசி ஊடகம் நடத்திய புலனாய்வில், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இரண்டு பெண்கள் தங்களை ஆன்-ஸ்கிரீன் கணவர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறியுள்ளனர்.

மேலும், மற்றொரு பெண் தனது அனுமதியின்றி பாலியல் அத்துமீறல் நடந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இதில் ஒரு பெண், தனக்கு நேர்ந்த கொடூரத்தை வெளியில் சொன்னால் முகத்தில் ஆசிட் வீசி தாக்குதல் நடத்தப்படும் என்று தனது ஆன்-ஸ்கிரீன் கணவர் மிரட்டியதாகத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் ஒட்டுமொத்த சின்னத்திரை உலகிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள், தங்களுக்கு நேர்ந்த இத்தகைய கொடுமைகளில் இருந்து தங்களைப் பாதுகாக்க நிகழ்ச்சித் தயாரிப்பு நிறுவனம் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து, சேனல் 4 தொலைக்காட்சி நிர்வாகம் இந்த நிகழ்ச்சியின் முந்தைய அனைத்து சீசன்களையும் தங்களது ஸ்ட்ரீமிங் மற்றும் சமூக வலைத்தள பக்கங்களில் இருந்து உடனடியாக நீக்கியுள்ளது. எனினும், குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் இந்த புகார்களை மறுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.