சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணிக்கு எதிரான IPL போட்டியில், ஹைதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது. இப்போட்டியின் 15-வது ஓவரில், ஹைதராபாத் வீரர் ஹென்ரிச் கிளாசனை, சிஎஸ்கே விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் அச்சு அசல் தோனி ஸ்டைலில் மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்து அவுட்டாக்கினார். தேர்ட் அம்பயர் அவுட் கொடுத்ததும், சஞ்சு சாம்சன் ஆக்ரோஷமாகக் கொண்டாடியதோடு, வெளியேறிய கிளாசனைப் பார்த்து ஏதோ கமெண்ட் அடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கடுப்பான கிளாசன், மீண்டும் சஞ்சு சாம்சனை நோக்கித் திரும்பி வந்து மைதானத்திலேயே கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

​இருவருக்கும் இடையே வார்த்தை முற்றி கைகலப்பு ஏற்படும் சூழ்நிலை உருவானதால், சக வீரர் அன்ஷுல் கம்போஜ் மற்றும் பௌலர் நூர் அகமது ஆகியோர் உடனடியாக இருவரையும் பிடித்து தனித்தனியாகப் பிரித்துவிட்டனர். நிலைமை கைமீறிப் போவதைத் தடுக்க அம்பயர்கள் உடனடியாக நடுவில் புகுந்து இருவரையும் சமாதானப்படுத்தினர். இந்த அதிரடி வெற்றியின் மூலம் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ள நிலையில், மைதானத்தில் சஞ்சு சாம்சன் மற்றும் கிளாசன் சண்டை போட்டுக் கொண்ட இந்த வீடியோ காட்சிகள் சோசியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது.