ஐபிஎல் 2026 தொடரில் பிளே-ஆஃப் (Playoffs) சுற்றுக்குத் தகுதி பெற சிஎஸ்கே அணிக்கு நேற்றைய போட்டி வாழ்வா சாவா என்ற இக்கட்டான சூழ்நிலையாக இருந்தது. ஆனால், சென்னை நிர்ணயித்த 181 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில், இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி 47 பந்துகளில் 70 ரன்கள் குவித்து அணியை ஒரு ஓவர் மீதமிருக்கும் போதே வெற்றி பெற வைத்தார். இந்த வெற்றியின் மூலம் ஹைதராபாத் அணி பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதியை உறுதி செய்தது. அதே நேரத்தில் சிஎஸ்கே அணியின் டாப் 4 வாய்ப்பு பலத்த அடி வாங்கியது.

​போட்டி முடிந்த பிறகு, சேப்பாக்கம் மைதானத்தில் இருந்த சென்னை ரசிகர்களைப் பார்த்து இஷான் கிஷன் செய்த சைகைதான் தற்போதைய டாப் ட்ரெண்டிங் சர்ச்சை! ரசிகர்களை நோக்கி முதலில் ‘ஹோம்’ (Home) சைகை காட்டிய இஷான் கிஷன், பின்னர் விசில் அடித்துவிட்டு, “எல்லாரும் கிளம்பி வீட்டுக்கு போங்க!” என்று சொல்வது போல சைகை செய்தார். சிஎஸ்கே-வின் புகழ்பெற்ற ‘விசில் போடு’ ஸ்லோகனை வைத்து அவமரியாதை செய்வது போல் இஷான் கிஷன் செய்த இந்த காரியம் சிஎஸ்கே ரசிகர்களைப் பயங்கரமாக உசுப்பிவிட்டுள்ளது.

“தேவையே இல்லாம வம்பு இழுக்கிறார், இனிமேல் எஸ்ஆர்ஹெச் மேட்ச்சை நாங்க வெறுப்போட தான் (Hate-watch) பார்ப்போம்” என்று சென்னை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இஷான் கிஷனை வறுத்தெடுத்து வருகின்றனர்.​ஆட்டநாயகன் (Player of the Match) விருது வாங்கிய பின் பேசிய இஷான் கிஷன், “விக்கெட் கீப்பிங் செய்யும் போதே பிட்ச் எவ்வளவு கடினமாக இருக்கிறது என்பதை உணர்ந்தேன். ஸ்பின்னர்கள் மற்றும் ஸ்லோ பால்களை எதிர்கொள்வது எளிதல்ல.

அதனால் 3-வது விக்கெட்டாக இறங்கிய நான், கடைசி வரை நின்று போட்டியை முடிக்க வேண்டும் என்று நினைத்து ஆடினேன்” என்று கூறினார். இந்த தோல்வியால் சிஎஸ்கே அணி தங்களின் கடைசி லீக் போட்டியில் ஜெயிப்பதோடு மட்டுமில்லாமல், மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளுக்காகவும் பிரார்த்தனை செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.