ஐபிஎல் நடப்புப் பருவத்தின் மிக முக்கியமான கட்டத்தில், சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற டாஸ்  நிகழ்வின் போது கேப்டன்களுக்கு இடையே நடந்த சுவாரசியமான சைகை உரையாடல் தற்பொழுது இணையத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், சேப்பாக்கம் ஆடுகளம் மிகவும் உலர்ந்து காணப்படுவதால், தாங்கள் முதலில் பேட்டிங் செய்யப்போவதாக அறிவித்தார். இலக்கை நிர்ணயித்து எதிரணியை அழுத்தத்திற்குள்ளாக்குவதே தங்களின் உத்தி என்றும் அவர் விளக்கமளித்தார்.

ருதுராஜ் கெய்க்வாட் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்த அடுத்த நொடி, அருகில் நின்றிருந்த ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் முகத்தில் அப்பட்டமான வியப்பு தெரிந்தது. சென்னை அணியின் இந்த முடிவு அவருக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியதை அவரது உடல்மொழி காட்டியது. அதே நேரத்தில், மைதானத்தின் அருகே நடந்து சென்ற தனது அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மாவை நோக்கித் திரும்பிய கம்மின்ஸ், தன் கண்களாலேயே ‘என்ன இது?’ என்பது போல ஒரு விசித்திரமான பார்வையைப் பரிமாறிக்கொண்டார்.

போட்டிக்கு முன்பாகவே தாங்கள் முதலில் பந்துவீச விரும்பியதாக கம்மின்ஸ் குறிப்பிட்டிருந்தார். சென்னை அணி டாஸ் வென்று தங்களுக்கு சாதகமான முடிவை (பந்துவீச்சு) தட்டில் வைத்து கொடுத்ததே கம்மின்ஸின் இந்த ஆச்சரியத்திற்குக் காரணம் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர். கம்மின்ஸின் அந்த வியப்பு வீணாகவில்லை என்பதைத் தொடர்ந்து நடந்த ஆட்டம் நிரூபித்தது. ஆடுகளத்தின் தன்மையை சென்னை அணியை விட ஹைதராபாத் நிர்வாகம் மிகத் துல்லியமாகக் கணித்திருந்தது.

சென்னையின் பேட்டிங் உத்தியைச் சிதறடித்த கம்மின்ஸ், அதிரடி காட்ட முயன்ற ருதுராஜை (15 ரன்கள்) வீழ்த்தி, டி20 கிரிக்கெட்டில் தனது 200-ஆவது விக்கெட்டைக் கைப்பற்றி அசத்தினார். சென்னை நிர்ணயித்த இலக்கை நோக்கி ஆடிய ஹைதராபாத் அணிக்கு, இஷான் கிஷன் மற்றும் ஹென்ரிச் கிளாசென் ஜோடி அமைத்த 75 ரன்கள் பார்ட்னர்ஷிப் வெற்றியை எளிதாக்கியது. இறுதியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஹைதராபாத் அணி பிளே-ஆஃப் சுற்றை உறுதி செய்துள்ளது. அதே வேளையில், தங்களது கடைசி ஹோம் மேட்ச்சில் தோல்வியடைந்த சென்னை அணி, தொடரிலிருந்து வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. டாஸ் போடும் போதே ஆட்டத்தின் போக்கை கணித்த பேட் கம்மின்ஸின் அந்த ‘வைரல்’ பார்வை, தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.