கட்சித் தாவல் தடைச் சட்ட புகாருக்கு ஆளாகிய ஒருவரை, உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரம் மூலம் பதவி நீக்கம் செய்ய முடியும் என்று அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளரும் எம்பியுமான  இன்பதுரை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,

கட்சித் தாவல் தடைச் சட்ட புகாருக்கு ஆளாகிய ஒருவரை தகுதி நீக்கம் செய்ய அரசியலமைப்பு சட்டத்தின் 10-ஆவது அட்டவணை சட்டப்பேரவைத் தலைவருக்கு முழு அதிகாரம் தருகிறது. அவ்வாறு புகாருக்கு உள்ளான ஒரு நபரை அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பதற்கு முன்னதாக, அரசியலமைப்பு சட்டப்பிரிவு 163-இன் படி முதலமைச்சரிடம் விளக்கம் கேட்டு ஆளுநர் (கவர்னர்) திருப்தி அடைவது அவசியமான ஒன்றாகும்.

கட்சித் தாவல் தொடர்பான விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், அதனை எதிர்கொள்ளும் நபர் அமைச்சராகப் பதவி வகித்தால், அரசியலமைப்பு சட்டப்பிரிவு 142 வழங்கும் சிறப்பு அதிகாரம் மூலம் உச்ச நீதிமன்றம் அவரைப் பதவி நீக்கம் செய்ய முடியும். இதற்கு, மணிப்பூர் மாநில மந்திரி தவுனோஜம் ஷியாம்குமார் சிங் வழக்கில் கடந்த 2020-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஒரு நல்ல உதாரணமாகும்.

எனவே, ஆகச் சிறந்த எல்லா நிலைகளிலும் நமது அரசியலமைப்புச் சட்டமே மேலோங்கி நிற்கும். இதுதான் நமது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மிக முக்கிய சிறப்பாகும் என்று அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.