விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டி அளித்தார். அவர்  பேசியதாவது, தமிழக அரசியல் சூழலில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சர் நாற்காலியில் அமர்வது அத்தனை எளிதான காரியம் அல்ல என்பது எனக்கு நன்றாகவே தெரியும். என்னை முதலமைச்சராக்கப் போவதாக திமுக அல்லது அதிமுக தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக யாரும் என்னை அணுகிப் பேசவில்லை. ஏதோ சில நலம் விரும்பிகள் பேசிய கிசுகிசுக்களின் அடிப்படையில் கேட்கப்பட்ட கேள்விக்குத்தான் நான் அவ்வாறு பதிலளித்தேன். என்னை முதலமைச்சர் என்று ஊடகங்களில் வெளியான செய்திகளை நான் வெறும் கேளிக்கையாகவே எடுத்துக் கொண்டேன். நாங்கள் தற்போதும் திமுக கூட்டணியில்தான் நீடிக்கிறோம்; அதில் எந்த மாற்றமும் இல்லை.

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) என்பது பாஜக-வின் ஆதரவுக் கட்சி என்ற எனது முந்தைய விமர்சனத்தில் இப்போதும் நான் உறுதியாகவே இருக்கிறேன். தவெக தலைமையிலான அமைச்சரவையில் விசிக ஒருபோதும் இடம்பெறாது என்பதை ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டேன். தமிழகத்தில் மீண்டும் ஒரு தேர்தல் வந்துவிடக் கூடாது, அதற்கு விசிக காரணமாக அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவும், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுவதைத் தடுக்கவுமே தவெக-வுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்கிறோம். இதில் எந்தவித ரகசிய உடன்பாடும் இல்லை, அனைத்தும் வெளிப்படையாகவே நடக்கிறது.

நாங்கள் தனியாக ஒரு அரசியல் கட்சியை நடத்தி வருகிறோம். கம்யூனிஸ்ட் கட்சிகள் எடுக்கும் முடிவுகளையே நாங்களும் எடுக்க வேண்டும் என்று யாரும் எதிர்பார்க்கக் கூடாது. எங்கள் கட்சியின் நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்க எங்களுக்குக் கூடுதல் அவகாசம் தேவைப்பட்டது. வெறும் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளை வைத்துக் கொண்டு நான் யாரிடமும் பேரம் பேச வேண்டிய அவசியம் இல்லை. உடனே விசிக பேரம் பேசுகிறது என்று அவதூறு பரப்புவது நியாயமற்றது என்றார்.