தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தவெக தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், அமைச்சர்களுக்கான துறைகள் நேற்று ஒதுக்கப்பட்டன. அதன்படி, எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்மோகனுக்குப் பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, திரைப்படத் தொழில்நுட்பம் மற்றும் ஒளிப்பதிவுச் சட்டம் உள்ளிட்ட துறைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நியமனம் குறித்து நடிகர் விஷால் தனது எக்ஸ் தளத்தில் கவலை தெரிவித்துள்ளார். தமிழ்த் திரையுலகை மீட்டெடுக்கப் பல சீர்திருத்தங்கள் தேவைப்படும் இந்தச் சூழலில், அனுபவம் குறைந்த ஒருவரிடம் எப்படித் தங்களின் குறைகளைக் கொண்டு சேர்க்க முடியும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், திரையுலகின் அத்தனைப் பிரச்சினைகளையும் முதலமைச்சர் விஜயே விரல் நுனியில் வைத்துள்ளதால், அவரே இதற்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்றும், இது யாரையும் குறைத்து மதிப்பிடுவதற்காகச் சொல்லப்பட்டதல்ல, தன் தனிப்பட்ட கருத்து என்றும் விஷால் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், முதலமைச்சர் விஜயிடம் நடிகர் விஷால் 3 முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். அதன்படி, பார்வையாளர்களின் சுமையைக் குறைக்க அரசே ஒரு திரைப்பட டிக்கெட் முன்பதிவுத் தளத்தை அமைக்க வேண்டும், தமிழ்நாட்டில் உள்ள இரட்டை வரி விதிப்பைத் தவிர்க்க உள்ளாட்சி வரியை நீக்க வேண்டும் மற்றும் குறைந்த பட்ஜெட் படங்களுக்கான மானியங்களை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ஆனால், விஷாலின் இந்தக் கருத்துக்கு மறைமுகமாகப் பதிலளித்துள்ள நடிகர் அருண் விஜய், முடிவெடுக்கும் விவகாரங்களில் அவசரப்பட்டுத் தலையிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

“>

 

இத்துறையைச் சார்ந்த ஒருவரே விஜய் பொறுப்பில் இருப்பதால், அவருக்கு நம் பிரச்சினைகள் நிச்சயம் தெரிந்திருக்கும் என்றும், அவர் எடுக்கும் முடிவுகளுக்கு மதிப்பளித்துப் பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் அருண் விஜய் தெரிவித்துள்ளார்.