தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த வரும், தற்போதைய மத்திய இணை மந்திரியுமான பண்டி சஞ்சய்யின் மகன் பகீரத் (25) மீது, 17 வயது சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகப் பகீர் புகார் எழுந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் ஐதராபாத் போலீசார், மத்திய மந்திரியின் மகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் தன் மீதான கைதைத் தவிர்ப்பதற்காக பகீரத் உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார்.
எனினும், குற்றச்சாட்டுகளின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு அவருக்கு முன்ஜாமீன் வழங்க நீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது.இதனைத் தொடர்ந்து, அவர் நாட்டை விட்டுத் தப்பி ஓடாமல் இருக்க லுக்அவுட் நோட்டீஸும் பிறப்பிக்கப்பட்டு, அவரைப் பிடிக்கத் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
இதற்கிடையே, மத்திய மந்திரி பண்டி சஞ்சய் சட்டம் தன் கடமையைச் செய்ய ஒத்துழைக்க வேண்டும் என்றும், தலைமறைவாக உள்ள தனது மகனை போலீசில் ஒப்படைக்க வேண்டும் என்றும் தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பகிரங்கமாக வலியுறுத்தினார். இந்த அரசியல் நெருக்குதல்களுக்கு மத்தியில், தன் மகன் எந்தத் தவறும் செய்யவில்லை என்று குறிப்பிட்ட மத்திய மந்திரி,எனினும் அவரை போலீசில் ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
இந்தத் பரபரப்பான சூழ்நிலைக்கு இடையே, தனிப்படை போலீசாரால் பகீரத் நேற்று அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். மத்திய இணை மந்திரியின் மகனே போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள இந்தச் சம்பவம் ஒட்டுமொத்த தெலுங்கானா மற்றும் தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
