மகாராஷ்டிர மாநிலம் துளே மாவட்டத்தில் உள்ள போலிச் சாமியார் ஒருவரின் ஆசிரமத்தில், சனி அமாவாசை நள்ளிரவு பூஜைக்குச் சென்ற இளம்பெண் மற்றும் அவரது ஆண் நண்பர் ஆகிய இருவர் கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாசிக் மற்றும் சோலாப்பூர் பகுதிகளில் போலிச் சாமியார்களின் அட்டூழியங்கள் வெளிவந்து சில நாட்களேயான நிலையில், தற்போது துளே மாவட்டத்தில் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது.
அதாவது கடந்த சனிக்கிழமை காலை அடையாளம் தெரியாத இளம்பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அவரது வாய் கைக்குட்டையால் கட்டப்பட்டிருந்ததுடன், உடலின் மீது ஒரு இருசக்கர வாகனமும் தூக்கி வீசப்பட்டிருந்தது. போலீசாரின் விசாரணையில், அவர் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ஜெயஸ்ரீ ரஜினிகாந்த் ககுஸ்தே (25) என்பது தெரியவந்தது. மேலும், உள்ளூர் கிராம ஊராட்சியில் ஊழியராகப் பணிபுரிந்து வந்த அவரது நண்பர் அக்ஷய் கங்காதர் சோனாவனே என்பவரையும் காணவில்லை என்பது தெரியவந்தது.
ஜெயஸ்ரீயின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டனர். ஜெயஸ்ரீ மற்றும் அக்ஷய் ஆகிய இருவரும் சனி அமாவாசை நள்ளிரவில் ஜெய்தானே பகுதியில் உள்ள யோகேஷ் (என்ற) பய்யா பாபு கைர்னார் என்ற போலிச் சாமியாரின் ஆசிரமத்திற்குச் சிறப்புப் பூஜைக்காகச் சென்றுள்ளனர். அங்கு பூஜை முடிந்த பின்னர், சாமியாருக்கும் இவர்களுக்கும் இடையே ஏதோ ஒரு காரணத்திற்காகக் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஆத்திரமடைந்த போலிச் சாமியார், அக்ஷய்யின் தலையில் இரும்புத் தடியால் பயங்கரமாகத் தாக்கியுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனைப் பார்த்து அலறிய ஜெயஸ்ரீயின் கழுத்தை, அவரது துப்பட்டாவாலேயே நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார் சாமியார்.
ஜெயஸ்ரீயின் சடலம் கிடந்த இடத்திற்கு அருகில் ஆரஞ்சு நிற கைக்குட்டை ஒன்றை போலீசார் மீட்டனர். காவல் துறையின் மோப்ப நாய் ‘டிரேக்கர்’ அந்த கைக்குட்டையை மோப்பம் பிடித்துவிட்டு, நேராகப் போலிச் சாமியார் யோகேஷின் ஆசிரமத்தை நோக்கி ஓடியது. உடனே போலீசார் சாமியாரைப் பிடித்து விசாரித்தனர். முதலில் முன்னுக்குப் பின் முரணாகப் பேசிய சாமியார், போலீசார் தங்களது பாணியில் விசாரித்தவுடன் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
குற்றத்தில் இருந்து தப்பிக்கச் சாமியார் போலீசாரிடம் ஒரு கட்டுக்கதையை அவிழ்த்து விட்டார். “ஜெயஸ்ரீயை வேறு ஒரு வாலிபர் கொலை செய்ய முயன்றார், அவளைக் காப்பாற்ற நான் சென்றபோது ஏற்பட்ட மோதலில் என் கையால் அந்த வாலிபர் கொல்லப்பட்டார்” என்று நாடகமாடினார். ஆனால் போலீசார் அதை நம்பவில்லை. பின்னர், கொலை செய்யப்பட்ட அக்ஷய்யின் சடலத்தை மாட்டு வண்டியில் ஏற்றிச் சென்று, ஆசிரமத்திற்கு அருகில் உள்ள வனப்பகுதியில் புதைத்ததை ஒப்புக்கொண்டார். மாட்டு வண்டிச் சக்கரங்களின் அடையாளங்களை வைத்துக் கொண்டு, அக்ஷய்யின் சடலத்தைப் போலீசார் மீட்டனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், “கொலை செய்யப்பட்ட இருவரும் என்ன காரணத்திற்காகப் போலிச் சாமியாரைச் சந்திக்க வந்தார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். முதற்கட்ட விசாரணையில் இது நரபலி போலத் தெரியவில்லை. இந்த இரட்டைக்கொலையில் சாமியாருக்கு உதவியாக வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது” என்று தெரிவித்தார். போலிச் சாமியாரைக் கைது செய்த போலீசார் அடுத்தகட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
