மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில், சாலையில் நடந்து சென்ற சிறுமி ஒருவரைப் பின் தொடர்ந்து சென்று, அநாகரிகமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற வாலிபர் சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று   சனிக்கிழமை இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெளியாகியுள்ள சிசிடிவி காட்சிகளின்படி, சிறுமி ஒருவர் சாலையில் தனியாக நடந்து சென்று கொண்டிருக்கிறார். அப்போது அவருக்குப் பின்னால் வந்த வாலிபர் ஒருவர், யாரும் இல்லாத நேரத்தைப் பார்த்துச் சிறுமியைத் திடீரெனக் கட்டிப்பிடித்து, அவருக்குக் கட்டாய முத்தம் கொடுக்க முயன்றுள்ளான்.

திடீரெனத் தனக்கு நேர்ந்த இந்த அநாகரிகச் செயலால் நிலைதடுமாறிய அந்தச் சிறுமி, ஆரம்பத்தில் என்ன நடக்கிறது என்று புரியாமல் திகைத்துள்ளார். பின்னர் தற்காப்பிற்காக அவர் சத்தமிட்டுக் கதறத் தொடங்கியதும், அந்த வாலிபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டான்.

 

இச்சம்பவம் குறித்துச் சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், இக்கொடூரச் செயலில் ஈடுபட்டவன் அஹ்மத் ராயின் என்பது அடையாளம் காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சிறுமியின் குடும்பத்தினருடன் பாஜக மண்டல அமைச்சர் சத்யம் சர்மா மற்றும் மண்டலத் துணைத் தலைவர் நிக்கி தாம்ரகர் உள்ளிட்டோர்  காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்தனர்.

இதுகுறித்து  காவல் நிலைய ஆய்வாளர் சதீஷ் சிங் கூறுகையில், “சிறுமியிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட புகாரின் பேரில், அஹ்மத் ராயின் என்ற வாலிபர் மீது போக்சோ மற்றும் பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக இருந்த அவனைக் காவல்துறையினர் சில மணி நேரங்களிலேயே அதிரடியாகக் கைது செய்துள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவன் மீது கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று தெரிவித்தார். பகல் நேரத்திலேயே சிறுமிக்கு நேர்ந்த இந்தத் துயரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.