ராம்பூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், திருமண ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், காதலன் ஏமாற்றியதால் உடலில் டீசல் ஊற்றித் தீக்குளித்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அதாவது ராம்பூர் பகுதியில் வசித்து வந்த இச்சிறுமி, கடுமையான தீக்காயங்களுடன் கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்குள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் 20 நாட்களாக உயிருக்குப் போராடி வந்த சிறுமி, நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து உயிரிழந்த சிறுமியின் மூத்த சகோதரர் பிரேதப் பரிசோதனை நிலையத்தில் கண்ணீருடன் கூறுகையில், “எனது 17 வயது தங்கைக்கு, எங்கள் பகுதியில் மளிகைக் கடை நடத்தி வரும் பரேலி பகுதியைச் சேர்ந்த 36 வயது திருமணமான நபருடன் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகப் பழக்கம் இருந்தது. அவன் எனது தங்கையைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளான்.
கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி அவளை கட்டாயப்படுத்திப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். ஆனால், அதற்கு அடுத்த நாளே அவளைத் திருமணம் செய்ய முடியாது என்று மறுத்ததோடு, இந்த விஷயத்தை வெளியில் யாரிடமாவது கூறினால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளான் என்றார்.
மேலும் அவர் கூறுகையில் கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி இரவு நாங்கள் அனைவரும் ஒரு திருமண விசேஷத்திற்குச் சென்றிருந்தோம். தங்கை மட்டும் வீட்டில் தனியாக இருந்தாள். அப்போது அந்த நபர் போனில் பேசி அவளைக் கடுமையாகத் திட்டியதாகத் தெரிகிறது. இதனால் மனமுடைந்த என் தங்கை, வீட்டில் இருந்த டீசலைத் தன் உடலில் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டாள்.
நாங்கள் ஓடிவந்து அவளை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். ஆனால் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாள். அங்கு 20 நாட்கள் நரக வேதனையை அனுபவித்து என் தங்கை இறந்துவிட்டாள் என்று கதறினார்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி அமித் குமார் கூறுகையில், “கடுமையான தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டிருந்த ராம்பூரைச் சேர்ந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். முதற்கட்டமாக இது தற்கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது குறித்து முறையான விசாரணை நடத்தி, குற்றவாளி மீது போக்சோ உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். காமுகனின் ஏமாற்றத்தால் 17 வயது சிறுமி தீக்கிரையாகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.
