உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் உள்ள வங்கி மேலாளர் ஒருவரின் அறையினுள், இளம்பெண் ஒருவர் பாலிவுட் பாடலுக்குக் கவர்ச்சியாக நடனமாடும் மூன்று வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குலேரியா பகுதியில் உள்ள பில்கிராம் கிளை வங்கி ஒன்றில் இந்த அதிர்ச்சிச் சம்பவம் நடந்துள்ளதாக உள்ளூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வரும் அந்த வீடியோக்களில், ஓர் இளம்பெண் பாலிவுட்டின் புகழ்பெற்ற பாடல்களுக்கு மிகத் தெளிவாக நடனமாடுவதைக் காண முடிகிறது. அந்த அறையில் உள்ள நாற்காலியில் அமர்ந்திருக்கும் நபர் ஒருவருக்கு முன்னால் அந்தப் பெண் நடனமாடுகிறார். அந்த நபர் அந்த வங்கியின் மேலாளர் என்று கூறப்படுகிறது.

 

எனினும், வீடியோவில் ஆடும் பெண்ணின் அடையாளம் இதுவரை கண்டறியப்படவில்லை. இந்த வீடியோக்கள் ஏதேனும் தனியார் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்டதா அல்லது வங்கியின் உள்ளேயே எடுக்கப்பட்டதா என்ற கோணத்தில் குழப்பம் நீடிக்கிறது. மேலும், அந்த வீடியோவில் வங்கி மேலாளர் கம்பளி ஜாக்கெட்  அணிந்திருப்பதைக் காண முடிகிறது. இதன் மூலம் இந்த வீடியோ கடந்த குளிர்காலத்தின் போது எடுக்கப்பட்டிருக்கலாம் என்று பலரும் கருதுகின்றனர்.

பொறுப்பான மற்றும் உயர் பதவிகளில் இருக்கும் அரசு அதிகாரிகள் மற்றும் வங்கி அதிகாரிகள் பொதுவெளியிலும், தங்களது அலுவலகங்களிலும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படை ஒழுக்கம் இல்லாமல் இப்படி நடந்து கொள்வதா என்று சமூக வலைதளப் பயனாளர்கள் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். இந்த விவகாரம் மாவட்ட அளவில் பெரும் புகாராக வெடித்ததைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அந்த வங்கி மேலாளர் உடனடியாக வேறு மாவட்டத்திற்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விவகாரம் குறித்து காவல் நிலைய அதிகாரி இக்தியார் உசேன் கூறுகையில், “சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து அறிந்துகொள்ளத் தீவிர விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் எந்த வங்கியின் கிளையில், எப்போது நடைபெற்றது என்பது குறித்த துல்லியமான விவரங்களைச் சேகரித்து வருகிறோம். விசாரணையின் முடிவில் அடுத்தகட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று தெரிவித்தார். அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கண்ணியத்தைக் குலைக்கும் வகையில் உள்ள இந்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.