விளையாட்டு உலகில் திறமை மற்றும் கடின உழைப்புக்கு இணையாக, முன்னணி வீரர்கள் பலரும் தங்களுக்கு என சில விசித்திரமான சென்டிமென்ட் மற்றும் மூடநம்பிக்கைகளை பின்பற்றுவது வழக்கம். மைதானத்தில் விளையாடும் போது ஏதேனும் ஒரு விஷயம் தற்செயலாக நடந்து, அதில் வெற்றி கிடைத்துவிட்டால், அதையே தங்களின் அதிர்ஷ்டக் குறியீடாக மாற்றிக் கொண்டு அதையே மீண்டும் மீண்டும் செய்யத் தொடங்கிவிடுவார்கள்.
அதன்படி உலகப் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் ஒருவர், போட்டி தொடங்குவதற்கு முன்பு டிரஸ்ஸிங் ரூமில் உள்ள அனைத்து கழிவறை மூடிகளையும் தானே நேரில் சென்று மூடி வைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அப்படிச் செய்தால் அன்றைய போட்டியில் சிறப்பாக விளையாடலாம் என்பது அவரது அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்தது.
அந்த வரிசையில், தற்போது பிரேசில் நாட்டின் நட்சத்திர கால்பந்து வீரரும், மான்செஸ்டர் சிட்டி கிளப் அணியின் முன்னணி கோல்கீப்பருமான எடர்சன் தனக்குள்ள ஒரு விசித்திர சென்டிமென்டை உடைத்துள்ளார். இது தொடர்பான அவரது பழைய பேட்டி வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது.
‘பிபிசி மேட்ச் ஆஃப் தி டே’ நிகழ்ச்சிக்காக அவர் அளித்த பேட்டியில் தனது வெற்றிக்கான ரகசியக் குறியீட்டைப் பகிர்ந்து கொண்டார். கடந்த 2017ஆம் ஆண்டு மான்செஸ்டர் சிட்டி அணியில் இணைந்தது முதல், கடந்த 8 ஆண்டுகளாக தான் விளையாடும் ஒவ்வொரு போட்டியின் போதும் ஒரே ஒரு குறிப்பிட்ட உள்ளாடையை (Underwear) மட்டுமே அணிந்து மைதானத்திற்குள் இறங்குவதாக அவர் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார். சாதாரண நாட்களில் வேறு ஆடைகளைப் பயன்படுத்தினாலும், போட்டி நடைபெறும் நாட்களில் மட்டும் இந்த ‘லக்கி’ உள்ளாடையை அவர் தவறாமல் அணிவாராம். ஆச்சரியப்படும் விதமாக இந்த 8 ஆண்டுகளில் அவர் பல முக்கிய கோப்பைகளையும் வென்று குவித்துள்ளார்.
எடர்சனின் இந்த வினோதப் பழக்கத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பேட்டி கண்ட தொகுப்பாளர், “கடந்த 8 வருடங்களாக ஒரே உள்ளாடையைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், இந்நேரம் அதன் வடிவம் (Shape) முற்றிலும் சிதைந்து போயிருக்குமே?” என்று நக்கலாகக் கேள்வி எழுப்பினார். அதற்கு எடர்சன் சற்றும் யோசிக்காமல், “அப்படியெல்லாம் ஒன்றும் ஆகவில்லை” என்று கூறி பலத்த சிரிப்புடன் பதிலளித்தார்.
பிரேசில் தேசிய அணிக்காக கடந்த 2018ஆம் ஆண்டு சிலி நாட்டுக்கு எதிரான போட்டியில் எடர்சன் அறிமுகமானார். அந்தப் போட்டியில் பிரேசில் 3-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது. தொடர்ந்து 2022ஆம் ஆண்டு நடைபெற்ற ஃபிஃபா (FIFA) உலகக்கோப்பை தொடரிலும் பிரேசில் அணிக்காக விளையாடினார். இதுவரை மான்செஸ்டர் சிட்டி அணிக்காக 276 போட்டிகளிலும், பிரேசில் நாட்டுக்காக 31 சர்வதேசப் போட்டிகளிலும் விளையாடியுள்ள எடர்சனின் இந்த சுவாரசியமான ‘உள்ளாடை’ சென்டிமென்ட் தற்போது ரசிகர்களிடையே பெரும் வேடிக்கையான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
