ஐபிஎல் 2026 தொடரில் தற்போது ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுவதற்கான போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன. சனிக்கிழமை நடைபெற்ற முக்கிய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றுத் தனது ப்ளே ஆஃப் வாய்ப்பைத் தக்க வைத்துக் கொண்டது. அதே நேரத்தில், குஜராத் அணியின் ப்ளே ஆஃப் கனவு தள்ளிப்போயுள்ளது.

இந்தப் போட்டியில் ரன் குவிப்பு ஒருபுறம் அனல் பறந்தாலும், மைதானத்தில் கேமராமேன் செய்த ஒரு செயலால் அரங்கேறிய காதல் தருணம் தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. குஜராத் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, ஆட்டத்தின் 17-வது ஓவரில் கேமராமேன் மைதானத்தில் போட்டி காண வந்திருந்த இளம் ஜோடி ஒன்றின் பக்கம் கேமராவைத் திருப்பினார். திடீரென தங்களது முகம் மைதானத்தில் உள்ள பெரிய திரையில் தோன்றுவதைக் கண்ட அந்த ஜோடி, லேசான அதிர்ச்சியுடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

 

அப்போது வர்ணனையாளர் “ஒரு அழகான ஜோடி போட்டியை ரசித்துக் கொண்டிருக்கிறது” என்று மைதானத்தில் மைக்கில் கூறினார். இதனைக் கேட்ட அந்த இளம்பெண் பயங்கரமாக வெட்கப்பட்டு, தனது முகத்தைக் கைகளால் மூடிக் கொண்டார். உடனடியாக அவரது காதலர் தனது கைகளால் இதய வடிவத்தை செய்து காதலியை நெகிழ வைத்தார். அதற்குப் பதிலளிக்கும் விதமாக, அந்தப் பெண் சட்டென்று காதலனின் கன்னத்தில் முத்தமிட்டார். இதைப் பார்த்த மைதானத்தில் இருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஒட்டுமொத்தமாகக் கூச்சலிட்டுக் கொண்டாடினர். மேலும் இந்த  வீடியோ தற்போது இணையத்தைக் கலக்கி வருகிறது.