ஆந்திரப் பிரதேசத்தில் குறைந்து வரும் மக்கள்தொகை வளர்ச்சி விகிதத்தைக் கட்டுப்படுத்தவும், பிறப்பு விகிதத்தை அதிகரிக்கவும் முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு ஒரு முக்கிய அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீகாகுளம் மாவட்டம் நரசன்னபேட்டாவில் நடைபெற்ற ‘கோல்டன் ஆந்திரா-க்ளீன் ஆந்திரா’ நிகழ்ச்சியில் பேசிய அவர், மாநிலத்தில் மூன்றாவது குழந்தை பிறந்தால் குடும்பங்களுக்கு ₹30,000 மற்றும் நான்காவது குழந்தை பிறந்தால் ₹40,000 மானியமாக அரசு வழங்கும் எனத் தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்திற்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இதன் முழு விவரங்கள் அடுத்த மாதத்திற்குள் வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே இரண்டாவது குழந்தையைப் பெற்றுக்கொள்ளும் தம்பதியருக்கு ₹25,000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் பரிசீலனையில் உள்ள நிலையில், இந்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தற்காலத்தில் பல தம்பதியரின் வருமானம் அதிகரிப்பதால் அவர்கள் ஒரே ஒரு குழந்தையோடு நிறுத்திக்கொள்ள விரும்புவதாகவும், இதுவே மக்கள்தொகை வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம் என்றும் முதலமைச்சர் கவலை தெரிவித்துள்ளார்.

ஒரு சமூகத்தின் மக்கள்தொகை நிலையாக இருக்க வேண்டுமானால் மொத்த கருவுறுதல் விகிதம் 2.1 ஆக இருக்க வேண்டும்; அது குறைந்தால் எதிர்காலத்தில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து, உழைக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்துவிடும் என அவர் எச்சரித்துள்ளார்.

குழந்தைகளைத் தேசத்தின் சுமையாகக் கருதாமல் நாட்டின் செல்வமாகக் கருத வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், பிறப்பு விகிதத்தை அதிகரிக்கச் சமூகம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனத் தம்பதியருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.