அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் சீனாவுக்கு மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்தின் போது, சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் அவர் அமர்ந்திருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
உலக ஊடகவியலாளர்கள் முன்னிலையில் இரு தலைவர்களும் அருகருகே நாற்காலியில் அமர்ந்திருக்கும் போது, அதிபர் டிரம்ப் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை விடக் குட்டையாகத் தெரிவது போன்ற காட்சி அதில் இடம் பெற்றுள்ளது.
இதைப்பார்த்த நெட்டிசன்கள், டிரம்பைக் குட்டையாகக் காட்டுவதற்காக சீன கம்யூனிஸ்ட் அரசு வேண்டுமென்றே மெல்லிய குஷின் கொண்ட நாற்காலியைக் கொடுத்துள்ளதா என்று கேள்வி எழுப்பியதுடன், இந்தச் சம்பவத்திற்கு “ஷி ஜின்பிங்கின் உயர்ந்த சிம்மாசனம்” என்றும் பெயரிட்டு ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
ஆனால், இந்த வைரல் வீடியோவின் பின்னணியில் இருக்கும் உண்மை என்னவென்றால், இது திட்டமிட்டு செய்யப்பட்ட ஒன்றல்ல, வெறும் கேமரா கோணம் மற்றும் அவர்கள் அமர்ந்திருந்த நிலையின் மாறுபாடே ஆகும். வீடியோவை உற்று நோக்கினால், இருவருடைய நாற்காலிகளும் ஒரே உயரத்தில் தான் இருக்கின்றன; ஆனால் அதிபர் டிரம்ப் சற்று முன்னோக்கிச் சாய்ந்து, கூன் விழுந்தாற்போல் அமர்ந்துள்ளார்.
அதே நேரத்தில், அதிபர் ஷி ஜின்பிங் நேராகவும் நிமிர்ந்தும் அமர்ந்துள்ளார். டிரம்ப் முன்னோக்கிச் சாய்ந்து அமர்ந்ததால் ஏற்பட்ட இந்த ஆப்டிகல் இல்யூஷன் மற்றும் கேமரா கோணத்தை, சமூக வலைதளங்கள் சீன அரசின் ஒரு பெரிய மாஸ்டர் பிளான் போலச் சித்தரித்து வைரலாக்கி விட்டன என்பதே உண்மை.
