பிலிப்பைன்ஸியில் உள்ள ஒரு சொகுசு விடுதிக்கு சுற்றுலா சென்ற நண்பர்கள் குழுவிற்கு ஒரு அதிர்ச்சிகரமான அனுபவம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள இயற்கை எழில் கொஞ்சும் காடுகளுக்கு அருகில் தங்கியிருந்த போது, அவர்களில் ஒருவர் கழிவறைக்குச் சென்றுள்ளார்.

அப்போது அங்கிருந்த கோப்பையினுள் ஏதோ விசித்திரமாக இருப்பதை அவர் கவனித்துள்ளார். முதலில் அது சரியாக ஃபிளஷ் செய்யப்படவில்லை என்று நினைத்து மீண்டும் ஃபிளஷ் செய்துள்ளார். ஆனால், அடுத்த சில நொடிகளில் பைப் வழியாக ஒரு பாம்பு திடீரென மேலே வந்துள்ளது.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் தனது நண்பர்களிடம் கூற, முதலில் அவர்கள் அதை விளையாட்டு என நினைத்து அலட்சியப்படுத்தியுள்ளனர். பின்னர் நேரில் சென்று பார்த்தபோது நிஜமாகவே பாம்பு இருப்பதை அறிந்து அனைவரும் பீதியடைந்தனர்.

உடனடியாக விடுதி ஊழியர்களுக்குத் தகவல் கொடுக்கப்பட்டு, அவர்கள் வந்து அந்தப் பாம்பைப் பத்திரமாக மீட்டனர். இந்தச் சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது.

பார்ப்பதற்கு அது உலகிலேயே மிக நச்சுத்தன்மை வாய்ந்த ‘ராஜநாகம்’ போல இருந்ததாக நெட்டிசன்கள் பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.

“>

 

அடர்ந்த காடுகள் மற்றும் இயற்கை பூங்காக்களுக்கு அருகில் இந்த விடுதி அமைந்துள்ளதால், வடிகால் அமைப்புகள் வழியாகப் பாம்புகள் பதுங்குவதற்கோ அல்லது குளிர்ச்சியான இடத்தைத் தேடியோ இப்படி மனிதர்கள் வாழும் இடங்களுக்குள் நுழைவது வழக்கம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்தி, பாதுகாப்பு வழிமுறைகளை பலப்படுத்தவும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.