ஈரான்-அமெரிக்கப் போர் மற்றும் ஹார்முஸ் ஜலசந்திப் பகுதியில் நிலவி வரும் கடுமையான பதற்றங்களுக்கு மத்தியில், வளைகுடா நாடுகளில் இருந்து தடையற்ற எரிவாயு விநியோகத்தை உறுதி செய்வதற்காக இந்தியா ஒரு மாபெரும் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.

ஓமானில் இருந்து அரபிக்கடல் வழியாக இந்தியாவுக்கு நேரடியாக ஆழ்கடலில் எரிவாயுக் குழாய் பதிக்கும் இந்தத் திட்டத்திற்குச் சுமார் 40,000 கோடி ரூபாய் செலவாகும் என்றும், இதனை முடிக்க ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் ஆகும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

புவிசார் அரசியல் ரீதியாகப் பதற்றமான பகுதிகளைத் தவிர்த்து அமைக்கப்படவுள்ள இக்குழாய் வழித்தடம் மூலம், ஓமன், சவுதி அரேபியா, கத்தார் மற்றும் ஈரான் உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா தடையின்றி எரிவாயுவைப் பெற முடியும்.

சுமார் 3,450 மீட்டர் ஆழம் வரை பதிக்கப்படவுள்ள இந்தக் கடலடி குழாய், உலகிலேயே மிகவும் ஆழமான கடலடி குழாய்த் திட்டங்களில் ஒன்றாகத் திகழப்போகிறது. இதற்காக, அரசுக்குச் சொந்தமான கெய்ல், இந்தியன் ஆயில் போன்ற நிறுவனங்கள் இணைந்து விரிவான அறிக்கை தயாரித்த பிறகு, ஓமன் அரசுடன் இந்தியா முறையான பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளது.

அண்மையில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கூட்டுத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, உலகளாவிய எண்ணெய் விநியோகத்தின் முக்கியப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முற்றுகையிட்டதால் உலக எரிசக்தி சந்தை பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது.

இந்தச் சூழ்நிலையில், சர்வதேசச் சந்தையின் விலை ஏற்ற இறக்கங்களைச் சார்ந்திருக்காமல், இந்தியாவின் சொந்த எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய இந்த ஆழ்கடல் குழாய்த் திட்டம் மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.