ஆந்திர மாநிலத்தில் புதுப்பெண் ஒருவர் திருமணக்கோலத்தில் கணவர் வீட்டிற்குச் சென்றபோது நிகழ்ந்த கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விசாகப்பட்டினம் மாவட்டம் கொண்டய்யா வலசாவைச் சேர்ந்த 31 வயதுடைய ராமேஸ்வரி என்பவருக்கும், அனகாபள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த நரசிங்க ராவ் என்பவருக்கும் நேற்று முன்தினம் திருமணம் நடைபெற்றது.
மேலும் திருமணச் சடங்குகள் முடிந்த பிறகு, மணப்பெண் ராமேஸ்வரி தனது கணவர், தாய் மற்றும் சகோதரியுடன் கார் மூலம் கணவர் வீட்டிற்குப் புறப்பட்டார். அவர்கள் சென்ற கார் உக்கு பொது மருத்துவமனை சாலை அருகே கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த மின் கம்பத்தின் மீது பலமாக மோதியது.
இந்த கோர விபத்தில், மணக்கோலத்திலேயே கணவர் அருகில் அமர்ந்திருந்த ராமேஸ்வரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காரில் பயணம் செய்த அவரது தாய் கனக மகாலட்சுமி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கணவர் நரசிங்க ராவ் மற்றும் சகோதரி வரலட்சுமி ஆகியோர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். மகிழ்ச்சியில் திளைத்திருந்த திருமண வீடு, மணப்பெண்ணின் திடீர் மறைவால் தற்போது ஆழ்ந்த சோகத்தில் மூழ்கியுள்ளது.
