தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியும் அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா, அண்மையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், திமுக மற்றும் உதயநிதி ஸ்டாலின் மீதான தனது விமர்சனங்களை முன்வைத்தார். சட்டமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசிய உரைகளுக்குப் பதிலடி கொடுக்க தான் தயாராக இருந்ததாகவும், ஆனால் தமிழக முதல்வர் விஜய் தன்னைத் தடுத்து நிறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் “இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு மட்டுமே நடைபெறுகிறது, எனவே நாம் இப்போது பேச வேண்டாம்” என்று முதல்வர் விஜய் அறிவுறுத்தியதால் தான் அமைதி காத்ததாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். மேலும், திமுகவின் தோல்விக்கு முதலமைச்சர் ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் மட்டுமே காரணம் என்று அவர் ஆணித்தரமாகக் குற்றம் சாட்டினார்.

இதனால் விஜய் முதலமைச்சராவதைத் தடுப்பதற்காக திமுக மற்றும் அதிமுக தரப்பில் திரைமறைவுப் பேச்சுவார்த்தைகள் நடந்ததாக ஆதவ் அர்ஜுனா ஒரு அதிரடிப் புகாரை முன்வைத்தார். ஆளுநர் மாளிகையில் இருந்தபடி ஒரு தொழிலதிபர் இந்தப் பேச்சுவார்த்தைக்கு உதவியதாகவும், சபரீசனும் உதயநிதியும் இணைந்து திமுகவின் எதிர்காலத்தைச் சிதைத்து வருவதாகவும் அவர் கூறினார்.

மேலும், எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுனும் உதயநிதியும் இணைந்து செயல்பட்டதால்தான் அதிமுகவிலிருந்து சி.வி.சண்முகம் போன்றவர்கள் வெளியேறியதாகவும் அவர் தெரிவித்தார். ஆளுநர் தரப்பில் முட்டுக்கட்டைகள் போடப்பட்டபோது, ராகுல் காந்தி தவெக ஆட்சிக்கு ஆதரவாகக் கைகொடுத்தார் என்ற புதிய தகவலையும் அவர் தனது உரையில் வெளிப்படுத்தினார்.