தமிழக முதல்வர் விஜய் அவர்கள் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை வென்று ஆட்சியைத் தக்க வைத்ததில் ‘குதிரை பேரம்’ நடந்திருப்பதாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மற்றும் வழக்கறிஞர் இன்பதுரை மிகக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் இது குறித்துப் பதிவிட்டுள்ள அவர், குறுக்கு வழியில் ஆதரவைப் பெற்று ஆட்சியைத் தக்க வைப்பவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்று எச்சரித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் மீது சிபிஐ (CBI) வழக்குப் பதியப்படுவதற்கான முகாந்திரம் அதிகம் இருப்பதாக அவர் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ​தனது குற்றச்சாட்டுக்கு வலுசேர்க்கும் விதமாக, 1993-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தில் நடந்த ஒரு வரலாற்றுச் சம்பவத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

அன்று நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற ஜே.எம்.எம் (JMM) எம்பிக்களின் ஆதரவைக் குறுக்கு வழியில் பெற்றதற்காக பிரதமர் நரசிம்மராவ் மற்றும் பூட்டாசிங் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்ததை அவர் நினைவூட்டியுள்ளார். அதே போன்ற ஒரு சூழல் தான் தற்போதும் நிலவுவதாகவும், சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் காரணமாக முதல்வர் விஜய் சட்ட ரீதியான நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும் என்றும் அவர் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.