அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்துவதற்காகச் சீனாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இப்பயணத்தின் போது எடுக்கப்பட்ட பல்வேறு வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அதிகாரப்பூர்வ இரவு விருந்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

சீன அதிபர் ஷி ஜின்பிங் அளித்த அரசு விருந்தில் பங்கேற்ற டொனால்ட் டிரம்ப், உணவருந்துவதற்கு முன்பு தனது இருக்கைக்கு அருகில் வந்து நின்றார். அப்போது, கூடுதல் வசதிக்காக இரு தலைவர்களின் நாற்காலிகளிலும் முதுகுப் பக்கத்தில் சிறிய குஷன்கள்  வைக்கப்பட்டிருந்தன. தனது நாற்காலியில் இருந்த குஷனைக் கவனித்த டிரம்ப், அதைத் தனக்கு வேண்டாம் எனக் கூறி அங்கிருந்த அதிகாரியிடம் அதை அகற்றுமாறு சைகை காட்டினார். அதிகாரி அந்த குஷனை எடுத்த பிறகு டிரம்ப் அமர்ந்தார்.

டிரம்பின் இந்தச் செயல் சாதாரணமான ஒன்றாக இருந்தாலும், சமூக வலைதளப் பயனர்கள் இதன் பின்னணியில் உள்ள ‘போட்டோ ஆப்டிக்ஸ்’ எனப்படும் புகைப்பட தந்திரத்தைக் கவனித்து விவாதிக்கத் தொடங்கியுள்ளனர். ‘எக்ஸ்’ (X) தளத்தில் பயனர்கள் சிலர் பதிவிட்டுள்ளதாவது: “சீன அரசு தங்களது அதிபர் ஷி ஜின்பிங்கை விட டொனால்ட் டிரம்ப் உயரமாகத் தெரிந்துவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்துள்ளது. அமரும் போது இருவரின் உயரமும் சமமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே டிரம்ப் அமரும் நாற்காலியில் அந்த குஷன் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், டிரம்ப் அதை புத்திசாலித்தனமாக அகற்றிவிட்டார். குஷனை எடுத்த பிறகு, அமர்ந்த நிலையில் இருவருக்கும் இடையே இருந்த உயர வித்தியாசம் கேமராவில் தெளிவாகத் தெரிந்தது என்று பதிவிட்டுள்ளனர்.

 

சீன அரசாங்கம் சர்வதேச தலைவர்களின் வருகையின் போது, நெறிமுறைகள் மற்றும் புகைப்பட கோணங்களை சென்டிமீட்டர் அளவில் துல்லியமாகத் திட்டமிடும் வழக்கம் கொண்டது என்பதால், இந்த ‘குஷன் தியரி’ சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வருகிறது. இந்த வீடியோவிற்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துகளையும், விசித்திரமான அரசியல் கோட்பாடுகளையும் பகிர்ந்து வருகின்றனர்.