தமிழகத்தில் புதிதாகப் பதவியேற்றுள்ள முதலமைச்சர் சி.ஜோசப் விஜய், இந்திய – இலங்கை இருநாட்டு கடற்றொழிலாளர்களையும் அழைத்து உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அகில இலங்கை கடற்றொழில் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் என்.வி.சுப்பிரமணியம் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், தமிழகத்தில் நீண்டகாலமாக இருந்த திராவிட ஆட்சியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ள விஜய்க்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் மீனவர் பிரச்சினை குறித்து முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்குக் கடிதம் மட்டுமே எழுதி வந்ததாகவும், தற்போதைய முதலமைச்சர் விஜயும் அதேபோல் கடிதம் எழுதத் தொடங்கியிருப்பது தங்களுக்கு வேதனையளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரமான கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் சட்டவிரோதத் தொழிலில் ஈடுபடுவதால் ஏற்படும் பாதிப்புகளைச் சுட்டிக்காட்டிய அவர், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண மீண்டும் ஒருமுறை பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
முதலமைச்சர் விஜய்க்கு யாழ்ப்பாணத்துடன் நெருங்கிய உறவு (புகுந்த வீடு) இருப்பதால், அவர் இந்தப் பிரச்சினையைச் சீர்தூக்கிப் பார்த்து இருநாட்டு மீனவர்களும் சகோதரத்துவத்துடன் வாழ வழிவகை செய்வார் என்று தாம் நம்புவதாக சுப்பிரமணியம் கூறினார்.
பழைய முறைகளைத் தவிர்த்து, நேரடிப் பேச்சுவார்த்தை மூலம் நிரந்தரத் தீர்வை எட்ட புதிய தமிழக அரசு முன்வர வேண்டும் என்பதே இலங்கை மீனவர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.
