கேரள மாநிலத்தைச் சேர்ந்த மணப்பெண் ஒருவருக்கு, திருமணத்தன்று கை விரலில் மோதிரம் பலமாக மாட்டிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போதே விரலில் வீக்கம் ஏற்பட்டு தாங்க முடியாத வலியால் மணப்பெண் துடித்தார்.

வலியுடன் திருமணச் சடங்குகளில் கலந்துகொள்ள முடியாமல் மணப்பெண் வருந்திய நிலையில், மணமக்களின் குடும்பத்தினர் உடனடியாக அவர்களை தீயணைப்பு நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். தீயணைப்பு வீரர்களிடம் நிலைமையை விளக்கி, மோதிரத்தை அகற்ற உதவி கோரினர்.

மணப்பெண்ணின் கையில் காயம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் மிகுந்த கவனம் செலுத்திய தீயணைப்பு வீரர்கள், சிறிய பிளேடு பொருத்தப்பட்ட மெட்டல் கட்டர் கருவியைப் பயன்படுத்தி மோதிரத்தைப் பாதுகாப்பாக வெட்டி எடுத்தனர். மோதிரம் அகற்றப்பட்ட பின்னரே மணப்பெண் வலியிலிருந்து விடுபட்டு நிம்மதி அடைந்தார்.

மலப்புரம் முன்னாள் எம்.எல்.ஏ. உபைதுல்லாவின் மருமகளான அந்த மணப்பெண்ணுக்கு உதவி செய்த தீயணைப்பு வீரர்களுக்குக் குடும்பத்தினர் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்தனர். இறுதியில் மணமக்களுக்கு வாழ்த்துகளைக் கூறி தீயணைப்பு வீரர்கள் வழியனுப்பி வைத்தது அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.