இந்தியாவின் பிரீமியம் ரயிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் டிக்கெட் பரிசோதகர் ஒருவர் ஊழலில் ஈடுபட்ட அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பீகாரில் இருந்து சென்ற வந்தே பாரத் ரயிலில் பயணி ஒருவர் வாரணாசி வரை செல்ல விரும்பியுள்ளார்.

அவரிடம் சாதாரண சூப்பர்ஃபாஸ்ட் ரயில் டிக்கெட் மட்டுமே இருந்ததால், வந்தே பாரத் ரயிலில் பயணிக்க எவ்வளவு அபராதம் என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த டிக்கெட் பரிசோதகர், “அரசாங்க ரசீது வேண்டும் என்றால் 750 ரூபாய் கட்ட வேண்டும், ரசீது இல்லாமல் வெறும் 380 ரூபாய் கொடுத்தால் போதும்” என்று ‘டிஸ்கவுண்ட்’ ஆஃபர் கொடுத்துள்ளார்.

ரயிலின் வருமானத்தை தனது சொந்தப் பைக்குள் கொண்டு செல்ல முயன்ற அவரது இந்தச் செயலை அந்தப் பயணி ரகசியமாக வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ காட்டுத்தீ போல பரவியதை அடுத்து, ரயில்வே நிர்வாகம் உடனடியாக விசாரணை நடத்தி அந்த டிக்கெட் பரிசோதகரை பணியிடை நீக்கம் செய்துள்ளது. வந்தே பாரத் போன்ற சொகுசு ரயிலிலேயே இப்படி ரசீது இல்லாமல் பணம் வசூலிக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

“>

 

“பிரீமியம் ரயில்களிலேயே நிலைமை இப்படி இருந்தால், சாதாரண ரயில்களின் நிலை என்ன?” என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதே சமயம், சில பயனர்கள் கிண்டலாக “அவர் அந்தப் பயணியின் பணத்தைத்தான் மிச்சப்படுத்த முயன்றார்” என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.