ராஜஸ்தான் மாநிலத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 2 வயது பிஞ்சு குழந்தையைத் தெருநாய் ஒன்று கொடூரமாகத் தாக்க முயன்றபோது, தனது உயிரைப் பணயம் வைத்துத் தாய் குழந்தையைக் காப்பாற்றிய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திடுக்கிடும் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பார்ப்போரின் நெஞ்சை நடுங்க வைத்துள்ளது.

ராஜஸ்தானின் குடியிருப்புப் பகுதியில் தாய் தனது 2 வயது குழந்தையுடன் நடந்து சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அங்கு வந்த வெறிபிடித்த தெருநாய் ஒன்று திடீரென குழந்தை மீது பாய்ந்து கடிக்க முயன்றது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்தத் தாக்குதலால் அதிர்ச்சியடைந்த தாய், சற்றும் யோசிக்காமல் தன் கையிலிருந்த பொருள்களைப் போட்டுவிட்டு உடனடியாக குழந்தையைக் கட்டிப்பிடித்துப் தூக்கிக் கொண்டு நாயை விரட்டப் போராடினார்.

ஆனால், அந்த வெறிநாய் விடாமல் தாயின் மீது பாய்ந்து ஆடையைப் பிடித்து இழுத்ததோடு, குழந்தையைக் கவ்வி இழுக்கவும் முயற்சித்தது. கடுமையான மரண பயத்திலும் தாய் தன் குழந்தையை இறுக்கமாகக் கட்டியணைத்துக் கொண்டு, நாயை உதைத்தும் கத்தியும் கூச்சலிட்டுப் போராடினார். தாயின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து நாயை விரட்டுவதற்குள், அந்தத் தாய் குழந்தையைக் காக்கத் தனியாளாகப் பெரும் போராட்டமே நடத்தியிருந்தார்.

இந்த கொடூரத் தாக்குதலில் தாய்க்கும் குழந்தைக்கும் லேசான காயங்கள் ஏற்பட்ட நிலையில், அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுச் சிகிச்சை அளிக்கப்பட்டனர். குடியிருப்புப் பகுதிகளில் அதிகரித்து வரும் தெருநாய்களின் தொல்லை குறித்துப் பொதுமக்கள் கடும் அச்சமும் ஆத்திரமும் அடைந்துள்ள நிலையில், இந்தச் சம்பவம் குறித்துப் பகுதி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.