அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஆர்கேடியா நகர மேயர் எலின் வாங், சீன அரசாங்கத்திற்காக சட்டவிரோத முகவராகச் செயல்பட்டதை ஒப்புக்கொண்டு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 58 வயதான எலின் வாங், தனது முன்னாள் காதலருடன் இணைந்து இணையதளத்தின் மூலம் சீனாவிற்கு ஆதரவான பிரச்சாரங்களை அமெரிக்காவில் பரப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
மேலும் சீன அதிகாரிகளின் வழிகாட்டுதலின் கீழ், உள்ளூர் சீன-அமெரிக்க சமூகத்தினரிடையே பெய்ஜிங்கின் நலன்களை மேம்படுத்தும் செய்திகளை இவர் வெளியிட்டு வந்ததாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு மற்றும் ஜனநாயக அமைப்பிற்கு எதிரான ஒரு தீவிரமான தாக்குதலாகக் கருதப்படுகிறது. சட்டவிரோத வெளிநாட்டு ஏஜென்டாகச் செயல்பட்டதற்காக இவருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இந்நிலையில் அமெரிக்க அட்டர்னி ஜெனரலுக்குத் தெரியப்படுத்தாமல் ரகசியமாக வெளிநாட்டு அரசாங்கத்திற்காக வேலை பார்த்தது மற்றும் பொதுமக்களுக்கு உண்மையை மறைத்தது போன்ற காரணங்களால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எலின் வாங்கின் ராஜினாமாவைத் தொடர்ந்து, ஆர்கேடியா நகர சபை புதிய மேயரைத் தேர்ந்தெடுக்கத் திட்டமிட்டுள்ளது.
