பாகிஸ்தானின் கராச்சியிலிருந்து கீஞ்சர் ஏரிக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 20-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளனர். விபத்தின் போது எடுக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் பேருந்து அதிவேகமாகச் சென்று திரும்ப முயன்றபோது, நிலைதடுமாறி சாலையில் சறுக்கி விழுவதை அந்த வீடியோவில் காண முடிகிறது. காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

“>

இந்த விபத்துக்கு பேருந்து ஓட்டுநரின் கவனக்குறைவே காரணம் என நேரில் பார்த்தவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். விபத்தின் தீவிரத்தைப் பார்த்த அப்பகுதி மக்கள் மற்றும் நெட்டிசன்கள், “இத்தனை உயிர்களை ஆபத்தில் தள்ளிய அந்த ஓட்டுநரைத் தூக்கிலிட வேண்டும்” என மிகுந்த ஆத்திரத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் போக்குவரத்து விதிகளை மீறியது மற்றும் அதீத வேகம் காரணமாகவே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சுற்றுலா சென்ற இடத்தில் நேர்ந்த இந்த அசம்பாவிதம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.