சென்னை: தமிழ்நாடு சட்டசபையின் இரண்டாம் நாள் கூட்டத்தொடர் இன்று விறுவிறுப்பாக நடைபெற்றது. முன்னதாக, தமிழக சட்டசபையின் புதிய சபாநாயகராக ஜே.சி.டி.பிரபாகர் மற்றும் துணை சபாநாயகராக ரவிசங்கர் ஆகியோர் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டு முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டனர்.

சபாநாயகரை அவை முன்னவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் மரபுப்படி இருக்கையில் அமர வைத்தனர். இதனைத் தொடர்ந்து, புதிய சபாநாயகருக்கு வாழ்த்து தெரிவித்துப் பேசிய அ.ம.மு.க. எம்.எல்.ஏ. காமராஜ், தமிழக அரசியல் சூழலில் அதிரடியான சில கருத்துகளைப் பதிவு செய்தார்.

சட்டமன்றத்தில் உரையாற்றிய காமராஜ், “அரசியல் சூழல் காரணமாக கடந்த காலங்களில் சில கசப்பான நிகழ்வுகள் அரங்கேறின. இருப்பினும், தமிழக இளைஞர்கள் உங்கள் மீது பெரும் நம்பிக்கை வைத்துள்ளனர். தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி முழுமையாக 5 ஆண்டு காலம் தொடர வேண்டும் என்பதே எங்களது விருப்பம். தற்போது சட்டமன்றத்தில் இளைஞர்கள் அதிகளவில் இடம்பெற்றிருப்பது ஆரோக்கியமான மாற்றமாகத் தெரிகிறது.

குறிப்பாக, முதலமைச்சர் பொறுப்பேற்றவுடன் கையெழுத்திட்ட அந்த 3 முக்கியத் திட்டங்களும் மிகுந்த வரவேற்புக்குரியவை. எனவே, த.வெ.க. தலைமையிலான இந்த அரசுக்கு எனது முழுமையான ஆதரவை நான் தெரிவித்துக்கொள்கிறேன்,” எனத் தெரிவித்தார். அ.ம.மு.க. எம்.எல்.ஏ.-வின் இந்த ஆதரவுப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.