இன்றைய காலகட்டத்தில் குடும்பம், வேலை, நண்பர்கள் என எல்லாத் தொடர்புகளும் வாட்ஸ்அப் மூலமே நடப்பதால், முக்கியமான மெசேஜ்களைத் தேடி எடுப்பது பலருக்கும் பெரிய தலைவலியாக இருக்கிறது. இந்தச் சிக்கலைத் தீர்க்க வாட்ஸ்அப் கொண்டு வந்துள்ள புதிய வசதிதான் ‘கஸ்டம் லிஸ்ட்’.

இதன் மூலம் உங்கள் சாட்களை குடும்பம், அலுவலகம், நெருங்கிய நண்பர்கள் எனத் தனித்தனிப் பிரிவுகளாகப் பிரித்து வைத்துக் கொள்ளலாம். இதனால் நூற்றுக்கணக்கான மெசேஜ்களுக்கு நடுவே தேவையானதைத் தேடி நேரத்தை வீணடிக்காமல், அந்தந்தப் பட்டியலை மட்டும் க்ளிக் செய்து உடனே பார்த்துக்கொள்ள முடியும்.

இந்த வசதியைப் பயன்படுத்த, வாட்ஸ்அப் சாட் பகுதிக்குச் சென்று லேசாகக் கீழே ஸ்வைப் செய்தால் கிடைக்கும் ‘லிஸ்ட்’ ஆப்ஷனைத் தேர்வு செய்ய வேண்டும். அங்கு உங்களுக்குத் தேவையான பெயரில் ஒரு பட்டியலை உருவாக்கி, அதில் குறிப்பிட்ட நபர்களையோ அல்லது குரூப்களையோ சேர்த்துக்கொள்ளலாம்.

இது மெசேஜ்களின் எண்ணிக்கையைக் குறைக்காது என்றாலும், குழப்பம் இல்லாமல் முக்கியமான உரையாடல்களை மட்டும் தனியாகப் பிரித்துக் காட்டும். தினசரி வாட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு இது மிகவும் பயனுள்ள மற்றும் எளிமையான அப்டேட்டாக இருக்கும்.