தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் நகர்வுகள் மாநிலத்தை பெரும் கொந்தளிப்புக்கு உள்ளாக்கியுள்ளன. பெரும்பான்மையை நிரூபிக்க ஒருபுறம் ஆதரவு திரட்டலும், மறுபுறம் ‘குதிரை பேர’ப் புகார்களும் எழுந்துள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் போராட்டக் களத்தில் இறங்கத் தயாராகி வருகிறார்.

சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை எட்ட இன்னும் இரண்டு இடங்கள் குறைவாக உள்ளது. காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன் 116 என்ற பலத்தைப் பெற்றுள்ள விஜய், தற்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆதரவை நாடியுள்ளார். திருமாவளவனின் ஆதரவு கிடைத்தால் 118 என்ற இலக்கை எட்டி, ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரலாம் என்பது விஜய்யின் திட்டம். இது நடந்தால், தமிழகத்தின் முதல் சிறுபான்மைச் சமூக முதலமைச்சராக விஜய் பதவியேற்பார்.

இந்தச் சூழலில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முன்வைத்துள்ள ‘குதிரை பேர’ப் புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமமுக எம்.எல்.ஏ காமராஜரின் பெயரில் போலிக் கடிதத்தை ஆளுநரிடம் தவெக சமர்ப்பித்திருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். பணம் கொடுத்து எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்க முயற்சிப்பதாகத் தவெக மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதால், ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுப்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

பெரும்பான்மை இருந்தும் ஆளுநர் காலம் தாழ்த்தினால், அவரை நோக்கிப் பேரணி செல்ல விஜய் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. மக்கள் ஆதரவு மற்றும் சட்டப்பூர்வமான கட்சிகளின் ஆதரவு தன்னிடம் இருப்பதை நிரூபிக்க இந்த நடவடிக்கையை அவர் மேற்கொள்ள வாய்ப்புள்ளது.

1984-ஆம் ஆண்டு ஆந்திராவில் என்.டி.ராமாராவ் (NTR) தனது ஆட்சியை மீட்டெடுக்க எம்.எல்.ஏ-க்களுடன் டெல்லி சென்று குடியரசுத் தலைவர் மாளிகை முன் போராடியது போன்றதொரு வியூகத்தை விஜய்யும் கையில் எடுக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

அதாவது என் டி ஆர் ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாததால் ஆளுநர் ஆட்சியை கலைத்து உத்தரவிட்ட நிலையில் குடியரசு தலைவர் மாளிகை நோக்கி தன்னுடைய எம்எல்ஏக்களுடன் சென்று பெரும்பான்மை கடிதத்தை சமர்ப்பித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட குடியரசு தலைவர் ஆந்திராவில் என்டிஆர் ஆட்சி தொடரும் என்று அறிவித்தார். மேலும் இதே போன்ற வியூகத்தை விஜயும் கையில் எடுக்கலாம் என்று கூறப்படுகிறது.

சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு தராமல் ஆளுநர் தடுத்தால், வீதியில் இறங்கிப் போராடித் தனது முதலமைச்சர் அரியாணையை விஜய் கைப்பற்றுவாரா என்பதைத் தமிழகமே உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறது.