பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில், 13 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன சிறுமி தற்போது நான்கு குழந்தைகளுக்குத் தாயாகக் கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு தேவ்கான் கிராமத்தைச் சேர்ந்த குல்நாஸ் காதுன் என்ற சிறுமி பள்ளிக்குச் சென்றபோது மாயமானார்.

இதுகுறித்து அவரது தாய் அளித்த புகாரின் பேரில், அதே கிராமத்தைச் சேர்ந்த ராகேஷ் தாக்கூர் என்பவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து பல ஆண்டுகளாகத் தேடி வந்தனர். ஆனால், போலீஸாரால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில், 13 ஆண்டுகளுக்குப் பிறகு சப்-இன்ஸ்பெக்டர் ராணி குமாரி தலைமையிலான போலீஸார் அந்தப் பெண்ணைக் கண்டுபிடித்தபோது பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவந்தன. குல்நாஸ் தனது பக்கத்து வீட்டில் வசித்த அப்துல் என்ற தனது உறவினருடன் காதல் வயப்பட்டு, அவருடன் வீட்டை விட்டு வெளியேறியது தெரியவந்தது.

தற்போது அந்தப் பெண்ணிற்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அந்தப் பெண், தனது விருப்பப்படியே சென்றதாக வாக்குமூலம் அளித்ததையடுத்து, நீதிமன்ற உத்தரவின்படி அவர் தனது கணவருடன் அனுப்பி வைக்கப்பட்டார். 13 ஆண்டுகால மர்மம் இதன் மூலம் முடிவுக்கு வந்தது.