நாடு முழுவதும் பெரும் புயலைக் கிளப்பிய நீட் (NEET UG) நுழைவுத்தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தைத் தொடர்ந்து, வரவிருக்கும் நீட் மறுதேர்வில் எவ்வித முறைகேடுகளும் பேப்பர் லீக் சம்பவங்களும் நடந்துவிடக் கூடாது என்பதற்காகப் பாதுகாப்புப் பணிகளில் இந்திய விமானப்படையை (IAF) நேரடியாகக் களமிறக்க மத்திய அரசு எடுத்துள்ள அதிரடி முடிவு கல்வி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மே 3-ஆம் தேதி நடந்த நீட் தேர்வின் வினாத்தாள் கசிந்தது உறுதி செய்யப்பட்டதால் அந்தத் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்பட்டு, தற்பொழுது ஜூன் 21-ஆம் தேதி 22 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களுக்காக மறுதேர்வு நடத்தப்படவுள்ளது. இந்த மறுதேர்வை மிகவும் ரகசியமாகவும் நேர்மையாகவும் நடத்துவதற்காக, வினாத்தாள்களை நாடு முழுவதும் உள்ள தேர்வு மையங்கள் மற்றும் விநியோக மையங்களுக்குப் பாதுகாப்பாகக் கொண்டு சேர்க்க இந்திய விமானப்படையின் ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர்கள் மற்றும் பிற ராணுவ விமானங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இல்லத்தில் நடந்த உயர்மட்டக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவின்படி, இந்திய விமானப்படையினர் 18 முக்கிய இடங்களில் இருந்து இந்த வினாத்தாள்களைப் பலத்த பாதுகாப்புடன் கொண்டு சேர்க்கவுள்ளனர். அதுமட்டுமின்றி, தேசிய தேர்வு முகமை (NTA) மற்றும் மத்திய கல்வி அமைச்சகம் வினாத்தாள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிபுணர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த அதிகாரிகளையும் ஜூன் 21 தேர்வு முடியும் வரை மொபைல் போன், இன்டர்நெட் போன்ற எந்தவொரு டிஜிட்டல் சாதனங்களும் இல்லாத முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்ட ரகசியப் பாதுகாப்புப் பகுதிக்கு (Lockdown) மாற்றியுள்ளனர்.
வினாத்தாள் கசிவைத் தடுக்க ராணுவப் பாதுகாப்புடன் வினாத்தாள் விநியோகம் செய்யப்படவுள்ள இந்தத் திடீர் அதிரடி நடவடிக்கைகள், தற்பொழுது நெட்டிசன்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் விவாதிக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் அசுர வேகத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
