தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம், ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளது. ஆனால், பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்கள் இல்லாததால், எம்.எல்.ஏ-க்களின் முழுப் பட்டியலைத் தந்தால் மட்டுமே ஆட்சி அமைக்க அனுமதிக்க முடியும் என கவர்னர் அர்லேகர் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்.

இதனால் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியைத் தொடர்ந்து, விஜய் தனது கட்சி நிர்வாகிகள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இதில் உச்ச நீதிமன்றத்தை நாடுவதா அல்லது அடுத்தகட்டமாக என்ன செய்வது என்பது குறித்துத் தீவிரமாக விவாதிக்கப்பட்டது. மற்றொரு பக்கம், விசிக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவைப் பெற த.வெ.க முயற்சி செய்து வருகிறது.

பனையூரில் நடந்த எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் பேசிய கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், “யார் எவ்வளவு கோடி ரூபாய் கொடுத்துப் பேரம் பேசினாலும் மயங்காமல், தலைவருக்கு உண்மையாக இருங்கள்; விரைவில் நல்ல முடிவு வரும்” என அறிவுறுத்தியுள்ளார்.