ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள மதுரா தாஸ் மாத்தூர் அரசு மருத்துவமனையில், 66 வயது மூதாட்டி ஒருவருக்குத் தவறான காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சண்டையில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பா தேவி என்ற அந்தப் பெண்ணின் இரண்டு கால்களிலும் எலும்பு முறிவுகள் இருந்தன.
இருப்பினும், அவரது இடது காலில் மட்டுமே அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் முடிவு செய்திருந்த நிலையில், கவனக்குறைவாக ஏப்ரல் 27 அன்று அவரது வலது காலில் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இந்த மாபெரும் தவறு வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த மருத்துவமனை நிர்வாகம் ஒரு குழுவை அமைத்தது. முதற்கட்ட விசாரணையில், அறுவை சிகிச்சைக்கான நிலையான வழிகாட்டுதல்களைப் பின்பற்றாததே இந்தத் தவறுக்குக் காரணம் என்றும், இதில் மருத்துவரின் மேற்பார்வைக் குறைபாடு இருப்பதாகவும் கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, எலும்பியல் துறையின் இணைப் பேராசிரியரான டாக்டர் ராமகிஷன் சௌத்ரி தனது பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்டு, ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவக் கல்வித் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். மருத்துவமனையின் இந்த மெத்தனப்போக்கு நோயாளிகளின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
