மத்தியப் பிரதேசத்தில் சினிமா படங்களையே மிஞ்சும் அளவுக்கு ஒரு வினோத காதல் கதை அரங்கேறி, இப்போது நாடு முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

சத்னா மத்திய சிறையில் உதவி கண்காணிப்பாளராகப் பணியாற்றிய ஃபிரோசா காதுன் என்ற பெண் அதிகாரிக்கும், அதே சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த தர்மேந்திர சிங் என்ற கைதிக்கும் இடையே மலர்ந்த காதல், மதத் தடைகளைத் தகர்த்து இப்போது திருமணத்தில் முடிந்துள்ளது. 2007-ல் ஒரு கொலை வழக்கில் கைதாகி 14 ஆண்டுகள் சிறையில் இருந்த தர்மேந்திர சிங், சிறை பணிகளில் ஃபிரோசாவுக்கு உதவியாக இருந்தபோதுதான் இருவருக்கும் இடையே காதல் தீப்பற்றியுள்ளது.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நன்னடத்தை அடிப்படையில் தர்மேந்திர சிங் விடுதலையானதைத் தொடர்ந்து, இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்தனர். ஆனால், மதம் வேறாக இருந்ததால் மணப்பெண்ணின் குடும்பத்தினர் இந்தத் திருமணத்திற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து விழாவைப் புறக்கணித்தனர்.

இந்த இக்கட்டான சூழலில், யாரும் எதிர்பாராத திருப்பமாக விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) மற்றும் பஜ்ரங் தளம் அமைப்பினர் இந்த ஜோடிக்கு ஆதரவாகக் களம் இறங்கினர். சத்தர்பூர் மாவட்டத்தில் கடந்த மே 5-ம் தேதி நடைபெற்ற இந்தத் திருமணத்தில், வி.எச்.பி மாவட்டத் துணைத் தலைவர் ராஜ்பகதூர் மிஸ்ராவே முன்னின்று மணப்பெண் ஃபிரோசாவுக்கு ‘கன்னியாதானம்’ செய்து வைத்து, ஒரு தந்தையின் கடமையை நிறைவேற்றியுள்ளார்.

சமூக வலைதளங்களில் இந்தச் செய்தி தீயாய் பரவி வரும் நிலையில், “காதலுக்குக் கண்ணில்லை என்பது சரிதான், ஆனால் சிறை அதிகாரிக்கே கைதி மேல் காதல் வந்திருப்பது தான் செம ட்விஸ்ட்” என நெட்டிசன்கள் கமெண்டுகளைத் தட்டி வருகின்றனர். சட்ட சிக்கல்கள், குடும்ப எதிர்ப்பு என அனைத்தையும் தாண்டி ஒரு வழியாக இந்த ‘ஜெயில்’ காதல் ஜோடி இப்போது இல்லற வாழ்க்கையில் இணைந்துள்ளது.