காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி அவர்கள் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தமிழக அரசியல் சூழல் குறித்துப் பதிவிட்டுள்ளார். அதில், 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ள தனிப்பெரும் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) ஆட்சி அமைக்க அழைக்காமல், வெறும் ஒரு இடத்தில் வென்ற பாஜகவை ஆளுநர் அழைக்க முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆளுநருக்கு என்று வரம்பற்ற அதிகாரம் எதுவும் கிடையாது என்றும், அவர் இந்திய அரசியல் சாசனத்திற்கு உட்பட்டுத்தான் நடக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பலமுறை தெளிவுபடுத்தி இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், தனிப்பெரும் கட்சியின் தலைவரான அவரை ஆளுநர் அழைப்பதே சரியான முறையாகும் என்று ஜோதிமணி குறிப்பிட்டுள்ளார். தவெக கூட்டணி என்று கடிதம் கொடுத்தாலும், அக்கட்சிதான் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.
டெல்லி மேலிடத்தின் அழுத்தத்திற்குப் பணிந்து தமிழக மக்களின் தீர்ப்பை மாற்ற நினைப்பது மிகப்பெரிய தவறு என்றும், இதனைத் தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் அவர் தனது பதிவில் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
