மேற்கு வங்க மாநிலத்தில் அரசியல் வன்முறை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் இடையே கடும் மோதல் வெடித்துள்ளது.

பாஜகவின் முக்கியத் தலைவர் சுவேந்து அதிகாரியின் நெருங்கிய உதவியாளர் சந்திரநாத் ரத், மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த அதிர்ச்சி விலகுவதற்குள்ளேயே, வடக்கு 24 பர்கானா மாவட்டத்தின் பனிஹாட்டி பகுதியில் பாஜக தொண்டர்கள் மீது மர்ம கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த கோரமான தாக்குதலில் 5 பாஜக தொண்டர்கள் படுகாயமடைந்து கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலின் பின்னணியில் ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் இருப்பதாக பாஜக குற்றம் சாட்டியுள்ள நிலையில், டிஎம்சி இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

அடுத்தடுத்து அரங்கேறியுள்ள இந்த வன்முறைச் சம்பவங்களால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால், கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.