மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள சந்தன் நகர் பகுதியில் காதலின் பெயரால் அரங்கேறியுள்ள கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. புனேவில் உள்ள ஒரு மாலில் ஒன்றாக வேலை பார்த்த திலீப் ரத்தோடு என்பவனும், 22 வயது இளம்பெண்ணும் காதலித்து வந்த நிலையில், அந்தப் பெண்ணிற்கு அவரது வீட்டில் வேறு இடத்தில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த காதலன் திலீப், கடந்த ஏப்ரல் 29-ம் தேதி அந்த இளம்பெண் வீட்டில் தனியாக இருந்தபோது அத்துமீறி நுழைந்து, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அந்தப் பெண்ணின் கழுத்தை ஓங்கி அறுத்துவிட்டுத் தப்பியோடினான்.
கழுத்து அறுபட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய அந்தப் பெண், தனது தம்பிக்கு வீடியோ கால் செய்து, “அண்ணா.. ஒரு பையன் என்னை அடிச்சுட்டான், என்னால் பேச முடியல, சீக்கிரம் வா” என்று தழுதழுத்த குரலில் கூறிவிட்டு மயங்கி விழுந்துள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தப் பெண்ணால் பேச முடியாத நிலையில், நடுங்கும் கைகளால் ஒரு காகிதத்தில் ‘திலீப் ரத்தோடு’ என்று எழுதித் தன் மீது தாக்குதல் நடத்திய கயவனை அடையளம் காட்டினார்.
தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அந்தப் பெண் உயிருக்குப் போராடி வரும் நிலையில், தலைமறைவாக இருந்த காதலனைப் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
