புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் அமோக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. இதன் மூலம் அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் என்.ரங்கசாமி, 5-ஆவது முறையாக புதுச்சேரியின் முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார்.

தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, புதிய அரசு அமைவதற்கான நடைமுறைகளை ரங்கசாமி முறைப்படி தொடங்கினார். இன்று ஆளுநரைச் சந்தித்த அவர், தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, புதிய ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக, முறைப்படி எனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து ஆளுநரிடம் கடிதம் அளித்துள்ளேன். விரைவில் புதிய அரசு பதவியேற்கும். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. அந்தக்கூட்டம் முடிந்த பிறகு, ஆட்சி அமைக்க உரிமை கோரும் கடிதத்தை ஆளுநரிடம் வழங்குவேன்.

தமிழக அரசியல் சூழல் மற்றும் விஜய் தலைமையிலான கட்சியின் வெற்றி குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ரங்கசாமி, “வெற்றி பெற்றுள்ள தம்பி விஜய்க்கு எனது வாழ்த்துகள். அவர் விரைவில் பதவியேற்பார், ஆட்சி அமையும்,” என்று சுருக்கமாகக் குறிப்பிட்டார். புதுவையில் ரங்கசாமி தலைமையிலான கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடித்திருப்பது அவரது கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.