கர்நாடக மாநிலம் பெங்களூருவில், போலீஸ் பிடியில் இருந்த வாலிபர் ஒருவர் பயத்தில் லாக்கர் சாவியை விழுங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்லாரி மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் என்ற வாலிபர், 17 வயது சிறுமியை அழைத்துச் சென்ற புகாரில் மாதநாயக்கனஹள்ளி போலீசாரால் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டார்.
மேலும் தன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்படலாம் என்ற அச்சத்தில், அவர் தற்கொலை முயற்சியாகத் தன்னிடம் இருந்த சிறிய லாக்கர் சாவி ஒன்றை விழுங்கினார். சாவியை விழுங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், அவரை உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பரிசோதனையில் சாவி வயிற்றில் இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மருத்துவர்கள் ஒரு வினோதமான சிகிச்சையைப் பரிந்துரைத்தனர்.
இந்நிலையில் அறுவை சிகிச்சை இல்லாமல் சாவியை வெளியேற்ற, அவருக்கு அதிக அளவில் வாழைப்பழங்களை வழங்குமாறு அறிவுறுத்தினர். அதன்படி, போலீசார் கார்த்திக்கிற்கு சுமார் 10 கிலோ வாழைப்பழங்களை உண்ணக் கொடுத்தனர். இந்த முயற்சியின் பலனாக, இயற்கை உபாதை மூலமாக அந்தச் சாவி பாதுகாப்பாக வெளியே வந்தது, இதனால் போலீசார் நிம்மதி அடைந்தனர்.
