தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.), ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் கடிதம் அளித்துள்ளது. 234 தொகுதிகளைக் கொண்ட தமிழகத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 118 எம்.எல்.ஏக்கள் தேவை. த.வெ.க.விற்கு 108 இடங்கள் உள்ள நிலையில், பெரும்பான்மைக்கு இன்னும் 10 இடங்கள் தேவைப்பட்டன. இந்நிலையில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி (5 எம்.எல்.ஏக்கள்), “அதிகாரப் பகிர்வு” என்ற நிபந்தனையுடன் விஜய்க்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் விஜய்க்கு ஆதரவான எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 113 ஆக உயர்ந்துள்ளது.

மீதமுள்ள 5 இடங்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி (2 எம்.எல்.ஏக்கள்) மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளிடம் விஜய் ஆதரவு கோரியுள்ளார். இது குறித்து சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன் கூறியதாவது, மக்கள் தீர்ப்பின்படி தனிப்பெரும் கட்சியாக வந்துள்ள த.வெ.க. தலைவர் விஜய்யை ஆளுநர் உடனடியாகப் பதவியேற்க அழைக்க வேண்டும். பெரும்பான்மையைச் சட்டமன்றத்தில்தான் நிரூபிக்க வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. ஆனால், ஆளுநர் குழப்பத்தை ஏற்படுத்துகிறார். தமிழகத்தில் அமித் ஷாவின் அரசியல் விளையாட்டுகளை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

ஆட்சி அமைப்பது தொடர்பாக விஜய் தன்னிடம் தொலைபேசியில் பேசியதாகவும், கடிதம் அனுப்பியிருப்பதாகவும் குறிப்பிட்ட திருமாவளவன், இது குறித்து கம்யூனிஸ்டு கட்சிகளுடன் ஆலோசித்துவிட்டு, பின்னர் கட்சியின் உயர்நிலைக்குழு கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். விசிக மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் ஆதரவு அளிக்கும் பட்சத்தில், தமிழகத்தின் புதிய முதலமைச்சராக விஜய் பதவியேற்பது உறுதியாகும் என்பதால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.